சனி, 11 ஜூலை, 2026

1950-க்குப் பிறகு மிக மோசமான 'எல் நினோ':

 

10 07 2026

El Nino 2026 Impact on Indian Monsoon

1950-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த எல் நினோ? இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? மழை ஏன் குறையலாம்?

எழுதியவர்: Anjali Marar

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு வேகமாக வலுப்பெற்று வருகிறது. இது 1950-க்குப் பிறகு பதிவான மிக வலுவான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக மாறும் வாய்ப்பு 81% உள்ளது என்று அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வியாழன் இரவு வெளியிடப்பட்ட மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், எல் நினோ உருவாகும் ஆண்டுகளில் இந்திய தென்மேற்கு பருவமழை பலவீனமடைவது வழக்கம். இந்த ஆண்டும் அதே நிலை உருவாகலாம் என்ற கவலை வானிலை ஆய்வாளர்களிடையே அதிகரித்துள்ளது.


எல் நினோ என்றால் என்ன?

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் நடுப்பகுதி மற்றும் கிழக்குப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் இயற்கை காலநிலை நிகழ்வு. இது என் சோ (ENSO: El Niño Southern Oscillation) எனப்படும் கடல்-வளிமண்டல சுழற்சியின் ஒரு கட்டமாகும்.

இதற்கு எதிர்மறையான கட்டமே லா நினா (La Niña). இந்த இரண்டு நிகழ்வுகளும் உலகம் முழுவதும் மழை, வெப்பநிலை, வறட்சி, வெள்ளம், வெப்ப அலை போன்ற காலநிலை மாற்றங்களை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

எல் நினோ உலகளவில் வெப்பநிலையை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இந்தியாவில் இதன் முக்கிய தாக்கம் மழைப்பொழிவை குறைப்பது.

இந்தியாவுக்கு ஏன் இது கவலை?

இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஏற்கனவே எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். அதற்கான முக்கிய காரணமாக உருவாகி வரும் எல் நினோ குறிப்பிடப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஜூலை 9 வெளியிட்ட வாராந்திர கணிப்பில், ஜூலை 22 வரை நாட்டில் சராசரியை விட சற்றுக் குறைவான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான், தெலங்கானாவின் சில பகுதிகள், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் வடக்கு உள்கர்நாடகத்தின் சில இடங்களில் இயல்பான மழை பெய்யலாம் என்றாலும், நாட்டின் பல பகுதிகளில் மழை குறையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவின் ஆண்டு மழைப்பொழிவில் மிகப்பெரிய பங்கை வழங்கும் ஜூலை மாதத்தில் மழை குறைவது, எல் நினோவின் முதல் வெளிப்படையான தாக்கமாக இருக்கலாம் என்று வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த மாத மழை, நீண்டகால சராசரியின் 94 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று IMD கணித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் நிலைமை உதவுமா?

பொதுவாக, இந்தியப் பெருங்கடல் டைபோல் (Indian Ocean Dipole - IOD) நேர்மறை நிலையில் இருந்தால், எல் நினோவின் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும்.

ஆனால் இந்த பருவத்தில் டைபோல் நடுநிலை (Neutral) நிலையில் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், எல் நினோவின் தாக்கத்தை சமநிலைப்படுத்தும் வாய்ப்பு தற்போது மிகவும் குறைவாகவே இருப்பதாக கருதப்படுகிறது.

எல் நினோ எவ்வளவு வலுவாக உள்ளது?

பசிபிக் பெருங்கடலில் உள்ள Niño 3.4 என்ற குறிப்பிட்ட பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலையை வைத்து எல் நினோவின் வலிமை கணிக்கப்படுகிறது.

0.5 டிகிரி செல்சியஸை கடந்தால் எல் நினோ அறிவிக்கப்படும்.
1.5 டிகிரி செல்சியஸை கடந்தால் வலுவான (Strong) எல் நினோ.
2 டிகிரி செல்சியஸை கடந்தால் மிகவும் வலுவான (Very Strong) எல் நினோ என வகைப்படுத்தப்படுகிறது.

தற்போது Niño 3.4 குறியீடு 1.2 டிகிரி செல்சியஸை ஆக உள்ளது. இது இன்னும் மிதமான நிலையில் இருந்தாலும், வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA)  கணித்துள்ளது.

அதன் சமீபத்திய அறிக்கையின்படி, 2026 இறுதிக்குள் இது மிகவும் வலுவான எல் நினோவாக மாறும் வாய்ப்பு 81 சதவீதம் உள்ளது. மேலும், 2027-ஆம் ஆண்டு வசந்த காலத்தின் தொடக்கப் பகுதி வரை இது நீடிக்கும் வாய்ப்பு 97 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-16 'காட்ஸில்லா' எல் நினோ மீண்டும் வருகிறதா?

சமீப காலங்களில் உலகம் கண்ட மிக வலுவான எல் நினோ 2015-16 காலகட்டத்தில் ஏற்பட்டது. அதற்கு "காட்ஸில்லா" (Godzilla) என்று பெயரிடப்பட்டது.

2014 முதல் 2016 வரை நீடித்த இந்த நிகழ்வு உலகளவில் பல வெப்பநிலை சாதனைகளை முறியடித்தது. அப்போது Niño 3.4 வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ்க்கும் மேல் நான்கு மாதங்களுக்கு மேலாக நீடித்தது.

இந்தியாவிலும் அதன் தாக்கம் கடுமையாக இருந்தது. 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகள், இந்த நூற்றாண்டில் மிகவும் வறண்ட நான்கு ஆண்டுகளில் இரண்டாக பதிவாகின. அந்த ஆண்டுகளில் பருவமழை, இயல்பான அளவின் 90 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.

இதற்கு முன்பு 1982-83, 1991-92, 1997-98 ஆகிய ஆண்டுகளிலும் மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

source https://tamil.indianexpress.com/india/el-ni%C3%B1o-2026-impact-of-el-ni%C3%B1o-on-indian-monsoon-12152076