தொகுதி மறுவரையறை மசோதா: நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என தி.மு.க. அறிவிப்பு17 7 2026
/indian-express-tamil/media/media_files/2026/07/18/dmk-delimitation-bill-tamil-nadu-lok-sabha-seats-mk-stalin-2026-07-18-08-41-08.jpg)
2029 மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை: நாடாளுமன்றத்தில் பலத்தை நிரூபிக்க திமுகவின் ஆதரவை நாடும் மத்திய அரசு
மக்களவை இடங்களை அதிகரிக்கவும், 2029 முதல் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தவும் மத்திய அரசு கொண்டு வரவுள்ள அரசியலமைப்பு திருத்த மசோதாவிற்கு (தொகுதி மறுவரையறை மசோதா) ஆதரவளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், "தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்களின் உரிமைகளும் நலன்களும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது" என்ற கடுமையான நிபந்தனையை திமுக விதித்துள்ளது.
மக்களவையில் 22 எம்பிக்களைக் கொண்டுள்ள திமுக, இந்த மசோதா தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:
*தொகுதி மறுவரையறை காரணமாகத் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை குறைந்துவிடக் கூடாது என்பதற்கான உறுதியான (Ironclad guarantee) உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.
*ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் துல்லியமான இடங்களின் எண்ணிக்கையை அரசு முன்கூட்டியே தெளிவாக அறிவிக்க வேண்டும்.
*அனைத்து மாநிலங்களுக்கும் தலா 50% இடங்கள் அதிகரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாய்மொழியாகக் கூறியதை, மசோதாவின் வரைவிலேயே எழுத்துப்பூர்வமாகச் சேர்க்க வேண்டும் என்று திமுக மற்றும் தேசியவாத காங்கிரஸ் (NCP-SP) ஆகிய கட்சிகள் வலியுறுத்துகின்றன.
நாடாளுமன்றத்தில் பலத்தை நிரூபிக்க மத்திய அரசு தீவிரம்:
நாடாளுமன்றத்தில் இந்த அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை மத்திய அரசுக்குத் தேவைப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த மசோதாவிற்கு 298 எம்பிக்கள் மட்டுமே ஆதரவளித்தனர்.
தற்போது மேற்கு வங்கத் தேர்தலில் பாஜகவிடம் திரிணாமுல் காங்கிரஸ் அடைந்த தோல்விக்குப் பின் அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் சிவசேனா (UBT) கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பயன்படுத்தி, அதிருப்தி எம்.பி.க்களின் ஆதரவைப் பெற மத்திய அரசு முயன்று வருகிறது. இவற்றுடன் திமுக மற்றும் சரத் பவாரின் என்.சி.பி (8 எம்பிக்கள்) ஆகிய கட்சிகளின் நிலைப்பாடும் மத்திய அரசுக்குச் சாதகமாகத் திரும்ப வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
காங்கிரஸ் மீது திமுக கடும் அதிருப்தி:
கடந்த கூட்டத்தொடரில் இந்த மசோதாவிற்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிக் கூட்டணியும் (INDIA Bloc) வாக்களித்த நிலையில், தற்போது தி.மு.க. தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது குறித்து காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திமுக தரப்பு வட்டாரங்கள், "காங்கிரஸ் கட்சி 'இந்தியா' கூட்டணியைச் சீர்குலைத்துவிட்டது. எங்களது ஆதரவோடு சட்டமன்றத் தேர்தலில் 5 இடங்களை வென்ற பிறகு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (கூட்டணி அமைத்து காங்கிரஸ் தி.மு.க.விற்குத் துரோகம் இழைத்துள்ளது. எனவே, அவர்கள் எங்களுக்குப் புத்திமதி சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்தக் குத்தகைதாரர்கள் தாங்கள் மட்டும்தான் என்ற எண்ணத்தில் இருந்து காங்கிரஸ் வெளியே வர வேண்டும்" என்று மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 16 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து எதிர்ப்பைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தென் மாநிலங்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை என்ற நிபந்தனையுடன் திமுக இறங்கி வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி ஆதாரம்: தி டைம்ஸ் ஆஃப் இண்டியா





