விராலிமலை, மார்ச். 19–
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள முக்கண்ணாமலை பட்டியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 400–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் இந்த பள்ளி 10–ம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி அருகில் மது குடித்து விட்டு மயங்கி கிடந்தான். இதைக்கண்ட ஊர் பொது மக்கள் அந்த மாணவனை அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விசாரணை நடத்தியதில் பள்ளி ஆசிரியர் ஒருவரே அந்த மாணவருக்கு மது வாங்கி கொடுத்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
முக்கண்ணாமலை பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவரின் பணி பதிவேடு கடந்த ஆண்டு திடீரென மாயமானது. அதை அப்போது தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்த ஆசிரியர் தான் எடுத்து மறைத்து வைத்து விட்டார் என பணி பதிவேட்டை பறி கொடுத்த ஆசிரியர் கூறி உள்ளார். இதனால் அந்த இரு ஆசிரியர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராமக் கல்விக்குழு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் புகார் சென்றுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர்கள் இருவரும் இரு கோஷ்டியாக செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் இரு பிரிவாக செயல்பட்டு வந்துள்ளனர். இதனால் பள்ளியில் அடிக்கடி மாணவர்களுக்கு இடையேயும், ஆசிரியர்களுக்கு இடையேயும் தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் பணி பதிவேட்டை பறி கொடுத்த ஆசிரியர் தன் கோஷ்டியை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவர்கள் 3 பேரை அழைத்து ரூ.500 கொடுத்துள்ளார். அந்த பணத்தில் மது வாங்கி குடித்து விட்டு பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரையும், எதிர் கோஷ்டி ஆசிரியரையும் தாக்கும் படி கூறினாராம்.
ஆசிரியரிடம் பணம் வாங்கி சென்ற 3 மாணவர்களும் மது வாங்கி வந்து பள்ளி அருகில் வைத்தே குடித்துள்ளனர். அப்போது தான் அளவுக்கு அதிகமாக குடித்த மாணவன் போதையில் மயங்கி விழுந்துள்ளான்.
இந்த தகவலை மாணவன் கூறியதும் பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவர்களுக்கு மது வாங்கி கொடுத்த ஆசிரியர் மீதும், கோஷ்டி தகராறில் ஈடுபட்ட ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர் நேற்று பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது பணி பதிவேட்டை பறி கொடுத்த ஆசிரியருக்கு ஆதரவாக 9–ம் வகுப்பு மாணவர்கள் 44 பேர் அதிகாரியிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையில், மாணவர்கள் டீ பார்ட்டி வைப்பதற்கு பணம் வேண்டும் என கேட்டு வாங்கி சென்றதாகவும், தான் மது வாங்குவதற்கு பணம் கொடுக்கவில்லை எனவும் விசாரணையின் போது ஆசிரியர் கூறியுள்ளார்.
இந்த பிரச்சனை குறித்து முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகனிடம் கேட்ட போது, ‘மாணவர்கள் மது குடித்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். தற்போது தேர்வு நடைபெறுவதால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை என்னிடம் வந்த பின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
நல்வழியை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே மாணவர்களை கோஷ்டியாக சேர்த்துக் கொண்டு செயல்படுவதும், மது வாங்கி கொடுக்கும் அளவிற்கு துணிந்துள்ளதும் பொது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.