திங்கள், 2 பிப்ரவரி, 2026

பொருளாதாரத் தேர்வில் பெயிலான பட்ஜெட்; ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ. 50,000 கோடி வெட்டு?” - ப.சிதம்பரம் விமர்சனம்

 

1 2 2026

P Chidambaram 3

கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற முக்கிய துறைகளில் நிதி குறைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், விளம்பரப்படுத்தப்பட்ட ஜல் ஜீவன் திட்டத்தில் மட்டும் ரூ. 50,000 கோடி நிதி வெட்டப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்களுடன் கூறினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-2027-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், “இந்த பட்ஜெட் உரையும், இந்த பட்ஜெட்டும் பொருளாதாரத் திட்டம் அல்லது பொருளாதார அரசியல் ஞானம் என்ற தேர்வில் தோல்வியடைந்துள்ளன. இது பொருளாதாரத் திட்டமும் அல்ல; பொருளாதார அரசியற் ஞானமும் அல்ல.” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்  செய்தியாளர்களிடம் பேசுகையில், “மொத்தச் செலவு ரூ. 1,503 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால், வருவாய் செலவு ரூ. 75,168 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், மூலதனச் செலவு ரூ. 1,44,376 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான கணக்கு. வருவாய் மற்றும் செலவினங்களில் ஏற்பட்ட இந்த பரிதாபகரமான நிலையை விளக்க ஒரு வார்த்தையும் இல்லை” என்று ப.சிதம்பரம் கூறினார்.

“உண்மையில், மத்திய அரசின் மூலதனச் செலவு 2024–25 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி) 3.2% இருந்து 2025–26 ஆம் ஆண்டில் 3.1% ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் மூலதனச் செலவு உண்மையிலேயே குறைந்துள்ளது. வருவாய் செலவிலும், சாதாரண மக்களை நேரடியாக பாதிக்கும் தலைப்புகளில்தான் வெட்டுகள் செய்யப்பட்டுள்ளன.” என்று ப.சிதம்பரம் கூறினார்.

தொடர்ந்து பேசிய ப.சிதம்பரம், “சில உதாரணங்களை நான் கூறுகிறேன்: ஊரக வளர்ச்சி: ரூ. 53,067 கோடி குறைப்பு

நகர்ப்புற வளர்ச்சி: ரூ. 39,573 கோடி

சமூக நலன்: ரூ. 9,999 கோடி

வேளாண்மை: ரூ. 6,987 கோடி

கல்வி: ரூ. 6,701 கோடி

சுகாதாரம்: ரூ. 3,686 கோடி

முக்கியமான துறைகளிலும் திட்டங்களிலும் நிதி வெட்டப்பட்டுள்ளது.

அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்ட ஜல் ஜீவன் மிஷன் குறித்து சொன்னால், இந்த எண்ணிக்கையை நீங்கள் நம்பவே முடியாது. அந்தத் திட்டத்திற்கான செலவு ரூ.67,000 கோடியிலிருந்து வெறும் ரூ.17,000 கோடியாக கொடூரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரே திட்டத்தில் ரூ.50,000 கோடி வெட்டப்பட்டுள்ளது.

2026–27-ம் ஆண்டில் அதே திட்டத்திற்கு ரூ. 67,670 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு என்ன நம்பகத்தன்மை இருக்கிறது? ரூ. 67,000 கோடியிலிருந்து ரூ. 17,000 கோடியாக குறைத்து, பின்னர் மீண்டும் ரூ. 67,000 கோடியாக உயர்த்தினால், அந்த எண்ணிக்கைகளுக்கு எவ்வித நம்பகத்தன்மையும் இல்லை.

பல மாதங்களாக நடைபெற்ற கணக்கீட்டுகளுக்குப் பிறகு, திருத்தப்பட்ட மதிப்பீட்டில் (ஆர்.இ) நிதிக் குறைவு 4.4% என்ற அளவில் வைத்திருக்கப்படுகிறது. 2026–27 ஆம் ஆண்டுக்கான கணிப்பு என்னவென்றால், நிதிக் குறைவு வெறும் 0.1% மட்டுமே குறைந்து 4.3% ஆகும். வருவாய் குறைவு 1.5% என்ற அளவில் அப்படியே நிலைத்திருக்கிறது. இது நிதிச் சிக்கனத்திற்கோ அல்லது நிதி ஒருங்கிணைப்பிற்கோ ஒரு துணிச்சலான முயற்சி அல்ல.” என்று கூறினார்.

மேலும், “பட்ஜெட் உரையின் மீது வைக்க வேண்டிய மிகக் கடுமையான விமர்சனம் என்னவென்றால், நிதி அமைச்சர் திட்டங்கள், நிகழ்ச்சிகள், மிஷன்கள், நிறுவனங்கள், முயற்சிகள், நிதிகள், குழுக்கள், மையங்கள் (hubs) ஆகியவற்றை பட்டியலிடுவதில் சலிப்பே இல்லாமல் செயல்பட்டுள்ளார். இவை என் சொற்கள் அல்ல - அவை அவரது உரையில் பயன்படுத்தப்பட்ட சொற்களே. அவர் தனது உரை முழுவதும் திட்டங்கள், நிகழ்ச்சிகள், மிஷன்கள், நிறுவனங்கள், முயற்சிகள், நிதிகள், குழுக்கள், மையங்கள் என்று நிரப்பியுள்ளார். நான் கணக்கிட்டதில் குறைந்தது 24 உள்ளன. இதில் எத்தனை திட்டங்கள் அடுத்த ஆண்டில் மறக்கப்பட்டு கைவிடப்படும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.” என்று ப. சிதம்பரம் கூறினார்.

“இறுதியாக, உரையின் பகுதி பி குறித்து, வருமானவரி சட்டம் 2026 நிறைவேற்றப்பட்டு, அது 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவிருக்கிறது. அதற்கு பல மாதங்கள் கழித்து, நிதி அமைச்சர் சில வரி விகிதங்களில் மாற்றங்களை செய்துள்ளார். பல சிறிய மாற்றங்களின் தாக்கத்தை கவனமாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், பெரும்பான்மையான மக்களுக்கு வருமான வரி அல்லது அதன் விகிதங்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மறைமுக வரிகள் தொடர்பாக, சாதாரண மக்கள் கவலைப்படுவது 159, 160 மற்றும் 161 ஆகிய பத்திகளில்தான். வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும் தனிப்பட்ட சாமான்களுக்கு சில சிறிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தச் சிறிய சலுகைகளை நான் வரவேற்கிறேன்.

எங்களுடைய தீர்ப்பு என்னவென்றால், இந்த பட்ஜெட் உரையும், இந்த பட்ஜெட்டும் பொருளாதாரத் திட்டம் அல்லது பொருளாதார அரசியல் ஞானம் என்ற தேர்வில் தோல்வியடைந்துள்ளன. இது பொருளாதாரத் திட்டமும் அல்ல; பொருளாதார அரசியற் ஞானமும் அல்ல.” என்று ப.சிதம்பரம் க்டும் விமர்சனங்களை வைத்தார்.


source https://tamil.indianexpress.com/india/budget-2026-p-chidambaram-criticism-jal-jeevan-mission-fund-cut-analysis-11065411