ஞாயிறு, 24 ஜூலை, 2016

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டை என்ற பெயரில், இங்குள்ள வீடுகளில் அடிக்கடி சோதனையிடுகின்றனர்.

அகர்தலா: வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில், பெண் ஒருவர் பலியானார்; அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, கொன்றதாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது, உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு நிலவுகிறது.
திரிபுராவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, மாணிக் சர்க்கார் முதல்வராக உள்ளார். இம்மாநில தலைநகர் அகர்தலா அருகே, இந்திய எல்லைப்பகுதியில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பெண் ஒருவர் பலியானார்.
ஆனால், அப்பெண் வீட்டில் புகுந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அதற்கு, அந்த பெண் சம்மதிக்காததால், சுட்டுக் கொலை செய்ததாகவும், உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, உள்ளூர் மக்கள் மேலும் கூறுகையில், 'எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டை என்ற பெயரில், இங்குள்ள வீடுகளில் அடிக்கடி சோதனையிடுகின்றனர். அப்பாவி மக்களை தாக்குவதும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறுவதும் சாதாரணமாக நடந்து வருகிறது' என்றனர்.
இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

Mohamed Ihsanullah