வெள்ளி, 21 நவம்பர், 2025

தெருக்களின் சாதி பெயர்கள் நீக்கம் – இடைக்காலத் தடையை நீடித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

 


Madurai

தமிழக அரசு வெளியிட்ட, மாநிலம் முழுவதும் தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், நீர்நிலைகள் போன்றவற்றில் உள்ள ‘சாதி சார்ந்த பெயர்கள்’ நீக்கப்படும் அரசாணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த பரமசிவம் தாக்கல் செய்த மனுவில், ஆதிதிராவிடர் குடியிருப்பு, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் ஆகியவற்றைப் போன்ற பெயர்களை நீக்க அரசாணை வெளியிடப்பட்டிருப்பதால், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் முகவரி மாற்றம் செய்யும் போது பொதுமக்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் எனவும், இதுபோன்ற இன்னும் பல பிரச்சினைகள் எழும் என்பதையும் குறிப்பிட்டார். எனவே, அரசாணையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.

இந்த மனுவை முன்பு விசாரித்த உயர்நீதிமன்றம், “ஜாதி பெயர்கள் நீக்கம் என்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. ஆனால் செயல்படுத்தும் நடைமுறை குறித்து அரசு தெளிவு அளிக்கவில்லை” எனக் கருத்து தெரிவித்திருந்தது. இதனால், அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

வழக்கு புதன்கிழமை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. நீதிபதிகள் அதை ஏற்று, விசாரணையை வரும் டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை, அரசாணையை செயல்படுத்தும் பணிகளில் இடைக்காலத் தடை தொடரும் எனவும் உத்தரவிட்டனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/caste-names-removal-go-interim-stay-extension-madurai-high-court-bench-10797340