/indian-express-tamil/media/media_files/2025/11/21/ktr-2-2025-11-21-05-13-15.jpg)
ஐதராபாத் ‘ஃபார்முலா இ’ வழக்கில் பி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி. ராமராவ், ஜனவரி மாதம் ஊழல் தடுப்புப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டார்.
தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, வியாழக்கிழமை பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) செயல் தலைவரும், சிர்சிலா சட்டமன்ற உறுப்பினருமான கே.டி. ராமராவ் மீது, ஐதராபாத் ‘ஃபார்முலா இ’ (Hyderabad Formula E) வழக்கில் வழக்குத் தொடர அனுமதி அளித்தார்.
இந்த வழக்கில் பிரபலமான கே.டி.ஆர்-க்கு எதிராக வழக்குத் தொடரும் நடவடிக்கையைத் தொடங்க அனுமதி கோரி, மாநிலத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏ.சி.பி) செப்டம்பர் 9-ம் தேதிஆளுநருக்கு எழுதியிருந்தது.
சமீபத்திய ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், இந்தப் பிரச்னை முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியால் பிரச்சாரத்தின் போதும் எழுப்பப்பட்டது.
நவம்பர் 11-ம் தேதி, ரேவந்த் ரெட்டி, வழக்குத் தொடர்வதற்கான அனுமதி கோரும் கோப்பு, "ஆளுநரிடம் இரண்டு மாதங்களாக நிலுவையில் உள்ளது" என்று கூறியதோடு, கே.டி.ஆர்-ஐ "காப்பாற்ற" பா.ஜ.க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.
முன்னதாக, 2023 பிப்ரவரியில், ஒரு வெளிநாட்டு நிறுவனமான ஃபார்முலா-இ ஆர்கனைசர்ஸ் (எஃப்.ஓ.இ -FOE) நிறுவனத்திற்கு ரூ.45 கோடி சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக கே.டி.ஆர்-க்கு ஏ.சி.பி சம்மன் அனுப்பியிருந்தது.
கே.டி.ஆர் மீதான ஏ.சி.பி வழக்கு என்ன?
2023 பிப்ரவரியில், அப்போதைய கே. சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்) தலைமையிலான பி.ஆர்.எஸ் அரசாங்கத்தில் கே.டி.ஆர், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை (எம்.ஏ.யு.டி) அமைச்சராக இருந்தபோது, ஐதராபாத் ஃபார்முலா இ (Formula-E) என்ற சர்வதேச எலக்ட்ரிக் கார் பந்தய நிகழ்வை நடத்தியது.
2024 டிசம்பர் 19-ல், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முறைகேடான பணம் செலுத்துதல் மற்றும் நிதியைத் தவறாக நிர்வகித்தது தொடர்பான வழக்கில் அவர் மீது ஏ.சி.பி வழக்குப் பதிவு செய்தது.
அவர் மீதும், வேறு சில குற்றவாளிகள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act) மற்றும் ஐ.பி.சி பிரிவுகள் 409 (கிரிமினல் நம்பிக்கைத் துரோகம்) மற்றும் 120பி (கிரிமினல் சதி) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது.
எஃப்.ஐ.ஆர்-இன் படி, எஃப்.ஓ.இ (FOE) நிறுவனத்துக்கு ரூ.45 கோடி செலுத்த அப்போதைய எம்.ஏ.யு.டி (MAUD) முதன்மைச் செயலாளர் அரவிந்த் குமாருக்கு அதிகாரம் அளிக்கும் முன், கே.டி.ஆர் மாநில அமைச்சரவையிடம் அனுமதி பெறத் தவறிவிட்டார்.
ஐதராபாத் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (ஹெச்.எம்.டி.ஏ) இரண்டு தவணைகளாக எஃப்.ஓ.இ-க்கு ரூ.45 கோடியைச் செலுத்தியதாக ஏ.சி.பி குற்றம் சாட்டியுள்ளது. பிரிட்டிஷ் பவுண்டுகளில் இந்த நிதிப் பரிமாற்றங்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ) விதிகளை மீறியதால், தெலங்கானா அரசுக்கு ஆர்.பி.ஐ ரூ.8 கோடி அபராதம் விதித்தது.
இந்த அபராதத்தை, 2023 டிசம்பரில் ஆட்சிக்கு வந்த ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு செலுத்தியதாக எஃப்.ஐ.ஆர் கூறுகிறது.
புதிய அரசாங்கம் ஆர்.பி.ஐ ஏன் அபராதம் விதித்தது என்று விசாரித்தபோது, பந்தய நிகழ்வில் நடந்ததாகக் கூறப்படும் விதிமீறல்கள் மற்றும் நிதி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக எஃப்.ஐ.ஆர் தெரிவிக்கிறது.
இந்த வழக்கில் வேறு யார் குற்றம்சாட்டப்பட்டவர்கள்?
எஃப்.ஐ.ஆர்-இல் கே.டி.ஆர் முதன்மைக் குற்றம்சாட்டப்பட்டவராகவும், அரவிந்த் குமார் இரண்டாவது குற்றம்சாட்டப்பட்டவராகவும், முன்னாள் ஹெச்.எம்.டி.ஏ தலைமைப் பொறியாளர் பி.எல்.என். ரெட்டி மூன்றாம் குற்றம்சாட்டப்பட்டவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரவிந்த் குமார் 2021 முதல் 2024 ஜனவரி வரை எம்.ஏ.யு.டி-ன் முதன்மைச் செயலாளராகவும், ஹெச்.எம்.டி.ஏ ஆணையராகவும் இருந்தார். நிதிப் பரிமாற்றங்கள் குறித்து விளக்கமளிக்க ரெட்டி அரசு அவருக்கு ஒரு மெமோ வழங்கியிருந்தது. அதற்குப் பதிலளித்த அவர், அப்போதைய அமைச்சர் கே.டி.ஆர்-ன் அறிவுறுத்தலின் பேரிலேயே அவ்வாறு செய்ததாகச் சமர்ப்பித்தார்.
அரவிந்த் குமார் மீது வழக்குத் தொடரத் டி.ஓ.பி.டி (பணியாளர் மற்றும் பயிற்சித் துறை) அனுமதியை ஏ.சி.பி தற்போது எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டால், கே.டி.ஆர், அரவிந்த் குமார் மற்றும் பி.எல்.என். ரெட்டி ஆகியோருக்கு எதிராக ஏ.சி.பி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும்.
கே.டி.ஆர் மீதான அமலாக்கத் துறை (இ.டி) வழக்கு என்ன?
2024 டிசம்பர் 28-ல், ஏ.சி.பி-யின் எஃப்.ஐ.ஆர்-ன் அடிப்படையில், அமலாக்கத் துறை (இ.டி) கே.டி.ஆர்-க்குச் சம்மன் அனுப்பியது, 2025 ஜனவரி 7-ல் ஆஜராகுமாறு அதில் கோரப்பட்டது. அரவிந்த் குமார் மற்றும் பி.எல்.என். ரெட்டி முறையே ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு கேட்கப்பட்டனர். மேலும், அவர்கள் தங்கள் அறிக்கைகளைப் பதிவு செய்தனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் இ.ட் விசாரணையை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் ஒரு வெளிநாட்டு நிறுவனத்துக்கு ரூ. 45 கோடி நிதி மாற்றப்பட்டிருப்பதால், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (எஃப்.இ.எம்.ஏ) கீழ் ஏதேனும் விதிமீறல்கள் உள்ளதா என்பதையும் இ.டி விசாரித்து வருகிறது.
பி.ஆர்.எஸ்-ன் நிலைப்பாடு என்ன?
கே.டி.ஆர்-ன் உறவினரும், பி.ஆர்.எஸ் தலைவர் டி. ஹரீஷ் ராவ், இந்த வழக்கை "அரசியல் பழிவாங்கலின் உச்சம்" என்று விமர்சித்தார். “அரசியலமைப்புப் பதவியில் இருக்கும் முதல்வர், கேள்வி கேட்கும் குரல்களை அடக்க முயல்வது கேவலமானது... கே.டி.ஆர்-க்கு எதிராகச் சட்டவிரோத வழக்குகளைப் புனைவது மட்டுமே ரேவந்த் ரெட்டியின் ஒரே நோக்கமாக உள்ளது... உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் ஆதாயம் தேட அரங்கேற்றப்படும் இந்தச் சிறிய நாடகங்களை மக்கள் கவனிக்கிறார்கள். சட்டவிரோத வழக்குகள் கே.டி.ஆரையோ அல்லது பி.ஆர்.எஸ் தலைவர்களையோ மனதளவில் பாதிக்காது. பி.ஆர்.எஸ் கட்சி கே.டி.ஆர்-க்கு முழு ஆதரவாக நிற்கிறது. ரேவந்த் ரெட்டியின் இழிவான நிலைப்பாட்டைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வியாழக்கிழமை பதிவிட்டுள்ளார்.
கே.டி.ஆர்-ன் நிலைப்பாடு என்ன?
ஃபார்முலா இ பந்தயத்தை நடத்துவதற்கும், ஹைதராபாத்தின் உலகளாவிய பிராண்ட் மதிப்பை உருவாக்குவதற்கும் தான் இந்தப் பரிவர்த்தனைகளுக்கு அதிகாரம் அளித்ததை கே.டி.ஆர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
இந்தச் செலுத்துதல்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்டதாகவும், பந்தயத்தை ஏற்பாடு செய்வதில் எந்த நிதி முறைகேடுகளும் இல்லை என்றும் அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
அவசியமான அனுமதிகளைப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து, கே.டி.ஆர் தான் ஹெச்.எம்.டி.ஏ-வின் துணைத் தலைவராக இருந்ததால் பணம் செலுத்த அதிகாரம் அளித்ததாகக் கூறினார். ஹெச்.எம்.டி.ஏ சுயமாகச் செயல்படுகிறது என்றும், நிதித் துறை அல்லது அமைச்சரவையிடம் இருந்து ஒப்புதல் பெறத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
ஏ.சி.பி-யின் எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக் கோரி அவர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். உயர் நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவில், அடுத்த உத்தரவு வரும்வரை கே.டி.ஆர்-ஐக் கைது செய்ய வேண்டாம் என்று மாநில ஏ.சி.பி-க்கு உத்தரவிட்டது.
ஃபார்முலா இ நிகழ்வு என்றால் என்ன?
ஹைதராபாத் இ-ப்ரிக்ஸ் (E-Prix) என்பது இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்காக நடத்தப்பட்ட முதல் நிகழ்வாகும். 2023 ஃபார்முலா இ நிகழ்வு தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, புதிய அரசாங்கத்தின் கீழ் உள்ள எம்.ஏ.யு.டி, பந்தயத்தை நடத்துவதற்கான நகர ஒப்பந்தத்தைத் (Host City Agreement) தொடர வேண்டாம் என்று முடிவு செய்ததால், 2024 பந்தயம் ரத்து செய்யப்பட்டது.
source https://tamil.indianexpress.com/india/why-ktr-is-under-hyderabad-formula-e-cloud-as-governor-clears-prosecution-decode-politics-10797824





