செவ்வாய், 19 ஜூலை, 2016

காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் மீது ஐ.நா. விசாரணைக்கு கோரிக்கை!.

காஷ்மீரில் ராணுவம் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 40 நபர்களுக்கு அதிகமானோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபை கண்காணிப்பின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை அண்மையில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 40 நபர்களுக்கு அதிகமானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்த விவகாரத்தை ஐ.நா.சபையில் வியாழக்கிழமை எழுப்பிய பாகிஸ்தான் தூதர் மஹீலா லோதி, இந்தியாவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்திய ராணுவம் தடை செய்யப்பட்ட பெல்லட் துப்பாக்கிகள் மூலம் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், ஐ.நா. தலைமைச் செயலக உயரதிகாரி எட்மண்ட் முல்லட்டை, பாகிஸ்தான் தூதர் மஹீலா லோதி சந்தித்துப் பேசினார்.
அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட அவர் வலியுறுத்தினார். மேலும், காஷ்மீரில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சூழல் நிலவுவதாகவும், இந்தியப் பாதுகாப்புப் படை அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் ஐ.நா. அதிகாரியிடம் குற்றம்சாட்டினார். பர்ஹான் வானியின் உயிரிழப்பு திட்டமிட்ட படுகொலை என்றும் மஹீலா லோதி கூறினார்.
இதையடுத்து சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயருக்கு கெடுதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
http://www.thoothuonline.com/archives/76402
காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் மீது ஐ.நா. விசாரணைக்கு கோரிக்கை!.