நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் 20 லட்சம் வழக்கறிஞர்களில் பாதிக்கும் மேல், 12 லட்சம் போலி வழக்கறிஞர்கள் என இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறையும், வழக்கறிஞர்கள் தங்களின் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வந்தபின், இந்த போலி வழக்கறிஞர்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது.
நீதி முறையில் இருந்து போலி வழக்கறிஞர்கள் முறையை நீக்கவும், துறையை வலுப்படுத்தவும் பணியில் உள்ள வழக்கறிஞர்களின் அங்கீகாரம், அடையாளம் ஆகியவற்றை பரிசீலனைக்கும், சரிபார்க்கப்படுவதும் அவசியம்.
இதையடுத்து, அனைத்து மாநிலங்களில் உள்ள பார் கவுன்சில்களுக்கும் இந்திய பார் கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.
அதில், வழக்கறிஞர்களின் பதிவுக்கட்டணம், அவர்கள் படித்த பல்கலைக்கழக சான்றிதழ், கல்லூரி சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.
நாடுமுழுவதும் ஏராளமான வழக்கறிஞர்கள் முறையான சான்றிதழ்கள் இன்றி நீதிமன்றங்களில் பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியான வழக்கறிஞர்கள் பட்டங்களைப் பெற்று, 30 சதவீத வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் பணியாற்றி வருகின்றனர் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை நீதிபதி ஜே.எஸ். கேகரும் கவலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாநிலங்களில் உள்ள அனைத்து பார் கவுன்சில்களும், வழக்கறிஞர்களுக்கு பதிவுக்கட்டணமாக ரூ. 2500 பெற்று அங்கீகாரத்தை புதுப்பிக்க கூற வேண்டும் என உத்தரவிடுகிறோம். மேலும், புதிய விதிமுறைகளின்படி, அனைத்து கல்வி சான்றிதழ்களையும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாநில பார் கவுன்சில்களில் வழக்கறிஞர்கள் சமர்பிக்க வேண்டும். மேலும், அந்த சான்றிதழ்களை குறிப்பிட்ட பல்கலைக்கழத்துக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி சரிபார்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில பார் கவுன்சில்கள் வழக்கறிஞர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தி பதிவுச்சான்றிதழ்களை அளிக்க வேண்டும். அந்த சான்றிதழ்களை அடுத்த 10 நாட்களுக்குள் பார் கவுன்சில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.