திங்கள், 6 மார்ச், 2023

தமிழ்நாட்டில் 10ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

 

வருகிற மார்ச் 10ம் தேதி தமிழ்நாட்டில் 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு முழுவதும் வருகிற மார்ச் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். அதில் சென்னையில் 200 இடங்களில் நடைபெறும் காய்ச்சல் தொற்று அதிகம் கண்டறியப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவமனைகளை கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காய்ச்சல் முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி தேவைக்கேற்ப நடைபெறும் இந்த முகாம்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக நுட்பனர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள்.

குளிர்காலம் மற்றும் பருவமழை காலம் நிறைவடையும்போது ஏற்படும் காய்ச்சல் இது. இதன் அறிகுறிகள் உடல் வலி, தொண்டை வலி, இருமல் சளியுடன் கூடிய காய்ச்சல். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தவறாமல் இந்த முகாமை அணுகி பரிசோதித்து தேவைக்கேற்ற சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த முகாம்களில் தேவையான மருந்து மாத்திரைகள் இடம் பெறும். பொதுவாக மக்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முக கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற அம்சங்களினால் நமக்கு ஏற்படும் கிருமி தொற்றிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே வருகிற மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் காய்ச்சல் முகாமில் தங்களை பரிசோதித்துக் கொண்டு தேவை இருப்பின் சிகிச்சை பெற்று நலமுடன் வாழ கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/fever-camp-at-1000-places-in-tamilnadu-on-march-10th-says-minister-m-subramanian.html