திங்கள், 6 மார்ச், 2023

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ

 

5 3 23

முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில் உள்ள பொக்கபுரம், மசினகுடி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ – 5 ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி தீயில் எரிந்து நாசம்.

நீலகிரி மாவட்டத்தில் , கடந்த பத்து ஆண்டுகளை விட இந்த ஆண்டு நிலவி வரும், கடும் உரை பணிபொழிவு மற்றும் அதிக வெயில் காரணமாக , வனப்பகுதிகளில் செடி, கொடிகள் கருகி கடும் வறட்சி நிலவி வருகிறது. இவ்வறட்சி காரணமாக, கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது.

மேலும், நேற்று நீலகிரி மாவட்டத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகயான பார்சன்ஸ்வேலி பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து, இன்று முதுமலை புலிகள் காப்பக வனவிலங்கு சரணாலயத்தின் , வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள மரவகண்டி, பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட
பகுதிகளில் காற்றின் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை
உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் மற்றும் அரியவகையானபறவையினங்களின்
வசிப்பிடமாக இருந்து வரும் நிலையில், வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக வனவிலங்குகள் இடம்பெயர்ந்தன. மேலும், தீ வனப்பகுதிகள் முழுவதும் பரவி வருவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.

இதனை கட்டுப்படுத்தும் பணியில், முதுமலை புலிகள் காப்பக உள் மண்டல மற்றும்
வெளிமண்டல வனத்துறையினர், பத்துக்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து தீயை
கட்டுப்படுத்தி வருகின்றனர். மேலும், காற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால்
காட்டு தீ ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவுகிறது. இதனை, வனத்துறையினர்
மற்றும் தீயணைப்பு துறையினர் உடன் சேர்ந்து , அப்பகுதியில் உள்ள கிராம மக்களும்
தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கு.பாலமுருகன்

source https://news7tamil.live/terrible-forest-fire-in-mudumalai-tiger-reserve-forest.html