சனி, 11 மார்ச், 2023

பீகாரில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகம்; ஒருவர் அடித்துக் கொலை; 3 பேர் கைது

 10 3 23

பீகாரின் சரண் மாவட்டத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் அந்த பகுதி கிராமத் தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பீகாரின் சரண் மாவட்டத்தில் ஜோகியா கிராமத்தில் இந்த சம்பவம் திங்கள்கிழமை காலை நடந்துள்ளது. கொலையான நபரிடம் இருந்து மாட்டிறைச்சி எதுவும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

பீகாரின் சரண் மாவட்டத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் நசீம் குரேஷி என்ற 56 வயது நபர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பகுதியின் சர்பஞ்ச் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும், கொலையானவரிடம் இருந்து மாட்டிறைச்சி எதுவும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

அவருடைய உறவினர் ஃபிரோஸ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை காலை நசீம் குரேஷி தனது மருமகன் ஃபிரோஸ் குரேஷியுடன் உறவினர்களைச் சந்திக்க சிவனில் இருந்து ரசூல்பூருக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது. இருவரையும் ஜோகியா கிராமத்தில் ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியது. அவர்கள் ஒரு பையில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஃபிரோஸ் தப்பித்தபோது, ​​நசீம் அந்த கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, பின்னர், அவர் உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சிகிச்சைக்காக பாட்னாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நசீம் செவ்வாய்கிழமை மாலை உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். “கிராம மக்கள்தான் நசீமை எங்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அந்த நபர் உயிரிழந்தார்” என்று சரண் காவல்துறை கண்காணிப்பாளர் கௌரவ் மங்லா, சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

ஜோகியா கிராமம் ரசூல்பூர் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டது. அந்த இடத்தில் இருந்து மாட்டிறைச்சி எதுவும் கைப்பற்றப்பட்டதை ரசூல்பூர் போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

பின்னர் அடையாளம் காணப்பட்ட மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் கிராமத் தலைவர் சுஷில் சிங் மற்றும் கிராமவாசிகளான ரவி சா மற்றும் உஜ்வல் ஷர்னா ஆகியோர் அடங்குவர் என்று போலீசார் தெரிவித்தனர்


source https://tamil.indianexpress.com/india/man-lynched-in-bihars-saran-district-on-suspicion-of-carrying-beef-3-held-608877/