செவ்வாய், 7 மார்ச், 2023

மீண்டும் கட்டாய முகக்கவசம்; மருத்துவர்கள் அறிவுரை

source https://tamil.indianexpress.com/tamilnadu/doctors-advised-to-wear-mask-again-due-to-viral-fever-spread-605561/


6 3 23

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, திருவாரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 26 பேர் வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் எட்டு நபர்கள் ஒரே நாளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என தனி பிரிவு தொடங்கப்பட்டு உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய பிரிவுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வெளி நோயாளிகள் பிரிவில் தினமும் வந்து சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அதிகம் கூட்டம் கூட கூடிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

க.சண்முகவடிவேல்