புதன், 8 மார்ச், 2023

குடும்ப வன்முறை… கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள்

 7 3 23 

இந்திய மக்கள் அனைவரும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். ஜனநாயக நாடு என்றாலும் கூட சட்டத்தை மதித்து அதை கடைபிடிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை. ஆனால் அனைவரும் சட்டத்தை கடைபிடிக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும்.

அதே சமயம் மக்களில் பலருக்கும் அடிப்படை சட்டம் என்ன என்பதும் அந்த சட்டத்தை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது எட்டாக்கனியாகத்தான் உள்ளது. சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் தங்களது வழக்கறிஞரை வைத்து சட்டப்படி தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்கிறார்கள்.

ஆனால் சதாரண மக்கள் கூலி வேலை செய்பவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் இதை அவர்களே தீர்த்தக்கொள்ள வேண்டிய நிலைதான் இருக்கிறது. அப்படியே தீர்த்துக்கொள்ள முயற்சித்தாலும், அரசியலமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர் அவர்களிடம் இல்லை என்பதால், தங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இருந்து முழுவதுமாக வெளிவர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாதாரண மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள் என்ன என்பது குறித்து தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் கவுன்சில் உறுப்பினராக இருக்கும் வழக்கறிஞர் மதுசூதனன் அவர்களை தொடர்புகொண்டோம்.

சாதாரண மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள் என்ன?

சாதாரண மக்கள் பொதுவாக மோட்டார் வாகன சட்டம், குடும்ப வன்முறை சட்டம், வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பு சட்டம், தமிழ்நாடு சிட்டி போலீஸ் ஆக்ட், தமிழ்நாடு போலீஸ் ஆக்ட், ஆகியவற்றை முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டும்.

மோட்டார் வாகன சட்டத்தை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம்?

நமது வாகனத்தில் வெளியில் செல்லும்போது வண்டி தொடர்பான ஆவனங்களை சரியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதேபோல் ஓட்டுனர் உரிமம் மற்றும் ஹெல்மட் இருக்க வேண்டும். வண்டி ஆவனங்கள் ஜெராக்ஸாக இல்லை என்றாலும், டிஜிட்டல் முறையில் வைத்திருக்க வேண்டும். சிக்னல் கட்டுப்பாடுகளை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும். இப்போது அனைத்து சிக்னலிலும் சிசிடிவி கேமரா வந்துவிட்டது. இதனால் விதிமுறைகளை மீறி வானகத்தை இயக்கினால் அதை போட்டோ எடுத்து உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இதனால் மோட்டார் வாகன சட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  

குடும்ப வன்முறைச்சட்டம் பற்றிய தகவல்

இன்றைய காலகட்டத்தில் பல குடும்பங்களில் பிரச்சனைகள் இருக்கிறது. இதனால் குடும்ப வன்முறை சட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதேபோல் அதிகமான குடும்ப பிரச்சினை இருப்பதால் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது. பெண்களுக்கு இந்த சட்டம் தொடர்பான தற்போது அதிகமான விழிப்புணவு இல்லை. ஒரு குடும்பத்தில் ஒரு திருமணம் நடந்து வீட்டிற்கு வரும் மருமகளை சமைக்க சொன்னாலே இது குடும்ப வன்முறை என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

நான் வேலைக்கு போகிறேன் என்று அந்த பெண் சொல்லும்போது இல்லை குடும்பத்தில் ஒரு ஆள் வீட்டில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் அதையும் ஒரு குடும்ப வன்முறை என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள். இதெல்லாமல் அப்படி இல்லை என்பதை நிரூக்க அவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் உள்ளது. அதேபோல் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வாழ்ந்தால் தான் குடும்ப வன்முறை சட்டத்தில் வழக்கு தொடர முடியும்.

ஆனால் திருமணமாகி சில நாட்களில் பிரிந்து அந்த பெண் வேறு எங்கேயோ வாழ்ந்து வரும் நிலையிலும் குடும்ப வன்முறை சட்டத்தில் வழக்கு தொடர்கிறார்கள். அதையும் நீதிமன்றத்தில் எடுத்து நடந்தும் நிலையும் உள்ளது. இந்த மாதிரியான வழக்குகள் குடும்ப வன்முறையில் வராது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் இது கிரிமினல் வழக்கும் இல்லை சிவில் வழக்கு என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

குடும்ப வன்முறை சட்டம் ஒரு சிவில் வழக்கு. குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தாலும் கூட இதை ஒரு சிவில் வழக்காதத்தான் நடந்த வேண்டும் என்பது விதிமுறை. குடும்ப வன்முறை சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதால் தான் ஓரளவுக்காகவது இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்.

இந்த சட்டத்தின்படி பார்த்தால் ஒரு அப்பா மேல் அவரது மகளே புகார் கொடுக்கலாம். 18 வயது நிரம்பிய ஒரு பெண் இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வரும்போது பெண்ணின் அப்பா கேள்வி கேட்டால் இது தவறு என்று குடும்ப வன்முறை சட்டம் சொல்கிறது. இதையெல்லம் அடிப்படையாக மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு 100 சதவீதம் வழி உள்ளது.

குடும்ப வன்முறை சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் அதில் இருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும்?

குடும்ப வன்முறை சட்டத்தை தவறாக பயன்படுத்தினாலும் அதை நாங்கள் செய்யவில்லை என்பதை நிரூபிக்க நீதிமன்றம் தான் செல்ல வேண்டும்.

தமிழ்நாடு சிட்டி போலீஸ் ஆக்ட், தமிழ்நாடு போலீஸ் ஆகட்

இன்றைக்கு சாதாரணமாக இரவு அன்டைமில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரிக்கிறார்கள் என்றால், அவர்கள் மீது பெரும்பாலும் பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் நடந்துகொள்பவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் 75 பிரிவு சிட்டி போலீஸ் ஆக்ட் வழக்குதான் போடுவார்கள். ஆனால் நல்லிரவில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக வந்த ஒருவர் மீது இது மாதிரியாக வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல் ரோட்டில் இரண்டுபேர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் என்றால், இருவர் மீதும் 75 பிரிவு வழக்கு பதிவு செய்து அபராதம் கட்டிவிட்டு போக சொல்வார்கள். இந்த சட்டம் பற்றி தெரியாமல் அவர்கள் அபாராதத்தை கட்டிவிட்டு இதோடு பிரச்சினை முடிந்தது என்று வந்துவிட்டால், பின்னாலில் அவர்கள் வேலைக்கு செல்லும்போது அல்லது வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் உள்ளிட்ட பணிகளை செய்யும்போது இந்த 75 பிரிவு வழக்கு தடையாக இருக்கும்.

இதன் காரணமாக அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அதனால் இந்த சட்டம் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக ஒரு சிறிய பிரச்சினைக்கு 75 பிரிவு வழக்கு பதிவு செய்கிறார்கள் என்றால் அதை ஒப்புக்கொள்ள கூடாது. நான் பொதுமக்களுக்கு இடையூறு செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இது போன்ற அடிப்படை சட்டங்களை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

75 பிரிவு வழங்கு பதிவாகிவிட்டது என்றால் அதில் இருந்து வெளிவருவது எப்படி?

இந்த 75 பிரிவு சட்டத்தில் வழக்கு பதிவு செய்தால் அபராதம் 300 ரூபாய். ஆனால் காவல்நிலையத்தில் இதைவிட அதிகமாக வாங்க வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்த பிரச்சினைகயில் இருந்து விடுபட்டால் போதும் என்று நினைக்கும் மக்கள் அபராதத்தை கட்டிவிட்டு வெளியில் வந்துவிடுவார்கள். நீங்கள் சார்ஜ் சீட்டில் கையெழுத்து போட்டாலே நீங்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். ஆனால் இதை நாங்கள் செய்யவில்லை என்று சார்ஜ் சீட் போடுங்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுங்கள் நான் நீதிமன்றத்தில் சென்று நிரூபித்துக்கொள்கிறேன் என்று சொல்ல வேண்டும்.

ஆனால் சரி பரவாயில்லை. இதோடு முடிந்துவிட்டது கோர்ட்டுக்கு அலைய வேண்டியதில்லை என்று நினைத்து காவல்நிலையத்தில் அபராதத்தை கட்டிவிட்டு வந்துவிடுகிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரியாமல் இப்படி செய்துவிடுகிறார்கள். அதனால் இந்த சட்டம் குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.

வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பு சட்டம்

வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பை கருதி அமல்படுத்தப்பட்டது தான் இந்த சட்டம். இதையும் பற்றி வேலைக்கு போகும் பெண்களும் ஆண்களும் சரியாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேலைக்கு போகும் இடத்தில் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எப்படி பழக வேண்டும் என்பதை இந்த சட்டம் சொல்கிறது.

எஃப்.ஐ.ஆர் (FIR) என்பது என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?

எஃப்.ஐ.ஆர் என்பது முதல் தகவல் அறிக்கை. ஒரு குற்ற சம்பவம் நடந்தால் அது தொடர்பான காவல் நிலையத்தில் அளிக்கப்படும் முதல் தகவல் தான் எஃப்.ஐ.ஆர் என்று பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவு எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய்மொழியாக ஒருவர் சொல்கிறார் என்றால் இதை காவலர்கள் எழுத்துப்பூர்வமாக மாற்றி வாய்மொழியாக சொல்பவரிடம் கையெழுத்து வாங்கி இந்த புகாரைத்தான் எஃப்.ஐ.ஆர்-க பதிவு செய்வார்கள். அனைத்து வழக்குகளுக்கும் ஆரம்ப புள்ளி புகார் அல்ல. அந்த புகாரினால் பதிவு செய்யப்படும் எஃப்.ஐ.ஆர் தான்.

முதலில் புகார் கொடுத்தால் அதன் மீதுதான் முதலில் நடவடிக்கை என்பது உண்மையா?

இரண்டு பேருக்கு இடையில் ஒரு பிரச்சினை என்றால், அதில் ஒருவர் முதலில் புகார் கொடுத்தார் என்றால் நான் தான் முதலில் புகார் கொடுத்தேன். அதன்மீது நடவடிக்கை எடுங்கள் என்று சொல்ல முடியாது. எந்த புகாரில் உண்மை இருக்கிறதோ அதன்பேரில் தான் நடவடிக்கை எடுக்க முடியும். பொதுவாக காவல்நிலையத்தில் ஒரு சமானியன் புகார் கொடுக்கிறார் என்றால், அந்த புகாரில் இரு தரப்பினருக்கும் இடையே சமாதானம் செய்யத்தான் முயற்சிப்பார்கள்.

பொதுவாக சமூகத்தில் ஒரு பிரபலமானவர், பணபலம் படைத்தவர் கொடுக்கும் புகார்கள் தான் பதியப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான ஒரு பாலியல் புகாரை ஒரு பெண் கொடுக்கிறார் என்றால் இந்த மாதிரியாக புகார்கள் பதியப்படுகின்றன. கணவனை மனைவி அடித்துவிட்டால் அந்த கணவனின் புகாருக்கு எஃப்.ஐ.ஆர் போடமாட்டார்கள். இதே அந்த செல்வாக்கு மிகுந்த ஆளாக இருந்தால் இந்த புகார் பதியப்பட வாய்ப்பு உள்ளது.

பொதுவாக இரு தரப்புக்கும் இடையே சமாதானம் செய்யவே அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரிய அளவில் குற்றம் நிகழ்ந்தால் எஃப்.ஐ.ஆர் கண்டிப்பாக பதிவு செய்வார்கள். ஆனால் இந்த புகாரில் தொடர்புடைய நபர் பெரிய கிரிமினலாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இதுதான் நடைமுறை.

சிட்டி போலீஸ் ஆக்ட் – ரூரல் போலீஸ் ஆக்ட் வித்தியாசம்

ரூரல் (கிராமபுற) பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் 75 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படும். அதே சமயம் சிட்டி பகுதிகளில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் சிட்டி போலீஸ் ஆக்ட் 7 பிரிவில் வழக்கு பதிவு செய்வார்கள். இரண்டு சட்டத்திற்கும் வித்தியாசம் இருந்தாலும் இதன் தாக்கம் ஒன்றுதான்.

source https://tamil.indianexpress.com/lifestyle/tamilnadu-common-people-must-know-basic-laws-in-tamil-605977/