வெள்ளி, 10 மார்ச், 2023

இந்தியா பணக்கார நாடா?

 8 3 23

P Chidambaram
P Chidambaram writes: Pivot to the bottom 50 per cent

P Chidambaram

அனைத்து தரப்பினருமே போட்டி போடும் தாராளமய பொருளாதார கொள்கை இந்தியாவில் பல முக்கிய நிறுவனங்களை உருவாக்கியது. தொடக்கத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த தொழில் நிறுவனங்கள் பின்னாட்களில் வளர்ச்சியடைந்தன. அதிலும் சில நிறுவனங்கள் சர்வதேச அளவில் வளர்ந்தன. பிறநாட்டு முன்னணி நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு சிறப்பான பங்களிப்பை  தந்தன.  இவற்றுள் முக்கியமாக நினைவுக்கு வருபவை இன்போசிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, லார்சன் அண்ட் டூப்ரோ,  சீரம் இன்ஸ்டிடியூட், மாருதி, ஹீரோ, டிவிஸ் மற்றும் பயோகான் நிறுவனங்களை சொல்லலாம். நாம் சொல்லியிருப்பது சில நிறுவனங்களை மட்டுமே. 

இந்த நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சியுடன் செல்வத்தை ஈட்டின. சில ஆயிரக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை ஊழியர்களாகவும், நிறுவன பங்கீட்டாளர்களாகவும்  உருவாக்கின. இந்த பெரிய நிறுவனங்களின் வளர்ச்சி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களையும் வளர்த்தது. இதனால் தொழிலில் துணிச்சலாக முதலீடு செய்யும் பக்குவம் ஏற்பட்டது இதனால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய முடியுமா என்ற அவநம்பிக்கையும் குறைந்தது. ஆதித்ய பிர்லா என்ற தொழிலதிபர் வெளிநாட்டுக்கே சென்று தொழில் தொடங்கி பிற தொழிலதிபர்களை ஊக்குவித்து வழிகாட்டியாக  இருந்தார்.   

நிலையான விலைகள் அடிப்படையில் இந்தியாவின் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 1991-92 ல்  25.4 லட்சம்  கோடியாகவும்,  அடுத்த நிதியாண்டில் இது இரண்டு மடங்காகி 50.8 லட்சம் கோடியாகவும் அது மேலும்  இரண்டு மடங்காகி 2014ல் 100 லட்சம் கோடியையும் தாண்டியது. தனிநபர் வருமானத்தை எடுத்துக்கொண்டால் 1991-92 ல்  ரூ. 6835 ஆக இருந்தது, 2021-22 ல் தனிநபர் வருமானம் ரூ.171498  ஆக அதிகரித்தது.

கைவிடப்பட்ட ஏழைகள்

இந்தியாவை நடுத்தர வர்க்கத்தினர் இருக்கும் நாடாக மாற்றி விட்டோம் என்று இப்போது பேசத் தொடங்கி விட்டனர்.  எனது கணிப்பின்படி இதற்கு மேலும் அதிக காலம் ஆகும்.  உலகின்  ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்று தற்பெருமை பேசுபவர்கள் நாம் இன்னும் நடுத்தர வருவாய் உள்ள நாடாக கூட  நாம் உயரவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

அதற்கு பிறகு தான் பணக்கார நாடு என்ற கற்பனை எல்லாம். இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 5 லட்சம் அமெரிக்க கோடி அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்ந்து விடும் என்றும் பேசப்படுகிறது என்னை பொறுத்த வரையில் இப்படி சொல்வதில் அர்த்தமே இல்லை. வேகமாக வளர்ச்சி இலக்கை அடையாமல்  இப்போது போலவே அப்படியே வளர்ந்தாலும் இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டி விடும்.  டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு ரோல்ஸ்ராய்ஸ் காரில் தான் போக வேண்டும் என்றில்லை, சைக்கிளிலும் செல்ல முடியும். அதாவது பொருளாதார அடிப்படையில் பார்த்தால் இதெல்லாம் முக்கியத்துவம் இல்லாத கணிப்புகள் தான். இப்போது கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்று பார்த்தால் நாட்டுக்கு கிடைக்கும் வருவாய் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது, செல்வம் யார் கைக்கு போகிறது, வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள முடியுமா போன்றவை தான். இதையெல்லாம் வைத்து  பார்த்தால்  இந்திய வளர்ச்சி வரலாறு நாட்டின் கடைநிலை மக்களான 50 சதவீத மக்களுக்கு எதுவுமே செய்யாமல்  தோற்றுவிட்டது. சான்சல், பிக்கெட்டி  அறிக்கைகளின்  கணிப்பு படி இவர்கள் இந்தியாவின் மொத்த வருமானத்தில் வெறும்  13 சதவீதத்தையே பெறுகின்றனர். ஆக்ஸ்பார்ம் நிறுவனத்தின் கணிப்பு படி இந்தியாவின் மொத்த செல்வத்தில் வெறும் 3 சதவீதம் மட்டுமே இவர்களிடம் உள்ளது.

இந்தியாவில் சொத்து வரி என்பது தற்போது நடைமுறையில் இல்லை.  வாரிசுரிமையில் கிடைக்கும் சொத்துக்கும் வரி கிடையாது. விவசாய வருமானம், பணக்காரர்கள் தமது சொந்த பந்தங்களுக்கு தரும் பரிசுகள் என்று எதற்குமே வரி கிடையாது.  இதனால் தான் பெரும் பணக்காரர்கள் தமது அளவுக்கதிகமான சொத்துக்களை தமது பினாமி சொந்தங்களுக்கு பரிசாக கொடுத்து தமதுடைமை ஆக்கிக் கொள்கின்றனர்.

இந்தியாவில் கடைநிலை மக்கள் சுமார் 50 சதவீத மக்கள் ஏன் ஏழைகளாகவே இருக்கின்றனர் என்று பார்த்தால்  அவர்களுக்கு மிகச் சிறிய சொத்துக்களும்,  நிலையில்லாத சொற்ப வருமானமும்  தான் இருக்கிறது.  நாட்டில் கோடிக்கணக்கான ஏழைகள் இருக்கும் போது நாம் இங்கு ஏழைகளே இல்லாதது மாதிரி பாவனை செய்கிறோம்.  பெரு நகரங்களில் ஒளிரும் புதிய மேம்பாலங்களை  மட்டுமே நமது கண்களுக்கு விருந்தாக்கி விட்டு அவற்றின் கீழ்  ஒண்டிக் கொண்டு  வாழும் ஏழைகளை பார்ப்பதை நாம்  தவிர்த்து விடுகிறோம். 

தெருக்கோடியிலும் ,  பார்க்கிங் இடங்களிலும் கையில் பென்சில், புத்தகங்கள், பொம்மைகள் என்று  விற்பனை செய்யும்  ஏராளமான சிறுவர், சிறுமிகளை நாம் பார்க்கிறோம்.  அன்றாடம் வேலைக்கு சென்று எதோ விற்று வயிற்றை கழுவும் ஏழைகள் இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமாக இருக்கின்றனர்.  சராசரியாக இரண்டரை ஏக்கருக்கு கீழாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அனைவரும் ஏழைகள். போதுமான உணவு கிடைக்காமல் திண்டாடுபவர்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடால் வாடுபவர்கள்  அனைவரும் ஏழைகள். ஏழைகளும், நடுத்தரத்திலும் அதற்கும்  கீழாக இருப்பவர்களும் தான் இந்திய மக்கள் தொகையில் பாதி அளவுக்கு இருக்கின்றனர்.

கவனம் பெற வேண்டிய மக்கள்

தற்போதைய அரசின் கொள்கைப்படி நாட்டுக்கு சேரும் செல்வத்தின் பெரும்பகுதி மேல்தட்டு மக்களுக்கே 50 சதவீதம் செல்கிறது.  மீதமுள்ள கீழ்த்தட்டு  மக்களுக்கு பலன் கிடைக்கும்  வகையில் எந்த பெரிய அரசியல் கட்சியும் கொள்கை முடிவுகளை அறிவிக்கவில்லை. அண்மையில் ராய்ப்பூரில் நடந்த அனைத்திந்திய காங்கிரஸ்  பேரவை கூட்டத்தில் கடைநிலையில் இருக்கும் சுமார் 50 சதவீத  மக்களின் நலனில் அக்கறை கொண்ட கொள்கைகளை தான் காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்க வேண்டும் என நான் வலியுறுத்தினேன்.

இந்திய மக்கள் தொகையில் கடைநிலையில் இருக்கும் சுமார் 50 சதவீதம் இருக்கும் மக்களுக்கு முன்னேற்றம் தரும் தாராளமய பொருளாதார கொள்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று நான் சொன்னேன்.  சாதி, மத அடிப்படையிலான வாக்காளர் குழுக்களை விட ஏழைகள் மீது அக்கறை செலுத்துவது மிகவும் பலமான வெற்றியை தரக்கூடியது. இதற்கு கட்டாயம்  எதிர்ப்பு வரலாம். 50 சதவீதத்தை உள்ளடக்கிய சுமார் 50 சதவீத மக்கள் இதை எதிர்ப்பார்கள். காரணம் பணக்காரர்களுக்கும், மேல்தட்டு மக்களுக்கும்   அதிக பொருளாதார முன்னேற்றம் கிடைக்காது என்பதால்  இதை  எதிர்ப்பார்கள்.   தவறான கொள்கைகளுடன் சாதி, மத  எண்ணத்துடன் வாக்கு வங்கியை  மட்டுமே  நம்பி செயல்படும் கட்சிகளுக்கிடையே காங்கிரஸ் இப்படி ஓரு முடிவெடுத்தால் அரசியலில் காங்கிரசுக்கு மோதல் அதிகரிக்கும்.

துணிச்சலான  அரவணைப்பு

அனைத்தையும் அறிந்தாலும் 50 சதவீத கீழ்த்தட்டு மக்களை அரவணைக்கும்  முடிவை காங்கிரஸ் எடுக்க வேண்டும்.  அவர்கள் தான் எமது மூலதனம் என்று காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். இதை கண்டிப்பாக காங்கிரஸ் செய்ய பல்வேறு  காரணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக தார்மீக அடிப்படையில் இது சரியான முடிவு

இரண்டாவதாக அடக்கி வைக்கப் பட்டிருக்கும் 50 சதவீத  கீழ்த்தட்டு மக்களின் ஆற்றலை மொத்தமாக வெளிக்கொணர்ந்து நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும்.

மூன்றாவதாக  மேற்கண்டவாறு செய்வதால் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

நான்காவதாக இந்த  உத்திகள்  பொருளாதாரத்தின் அனைத்து அமைப்புகளிலும் சிறப்பான போட்டியை தொடக்கி வைப்பதுடன் உற்பத்தி திறனையும் அதிகரிக்கும்.பொருளாதார அளவுகோலால் அளக்கப்படும் சாதி, மதம், மொழி, இனம்  போன்ற பேதங்கள்  தகர்க்கப் படும்.

கடைசியாக இந்திய மக்களை பிரிக்கும் மத பிரிவினைவாதிகளின் நச்சுக்கு இது நல்ல விஷமுறிவாகவும் செயல்படும். (இந்துத்வாவையும், இந்து மதத்தையும் இணைத்து குழப்பிக்கொள்ளக்கூடாது)

இந்திய மக்களின் கடைநிலை மக்களில் 50 சதவீதத்தினர் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது இருந்த அதே நிலையில் தான் இருக்கின்றனர். பாராளமன்றத்திலோ, சட்ட மன்றத்திலோ கடைநிலை மக்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை.  ஒரு அணைப்புக்கான இவர்கள் காத்திருக்கின்றனர்.  தங்களை அங்கீகரிக்க வேண்டும் எனவும் இவர்கள் நினைக்கின்றனர். தம்மை ஆதரித்து, அரவணைப்பவர்களை வெற்றிக்கனியை சுவைத்த வீரர்களாக மாற்றும் ஆற்றல் இந்த 50 சதவீத மக்களிடம் மட்டுமே இருக்கிறது.

தமிழில் : த. வளவன்


source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-column-world-economy-liberal-economy-reliance-606708/