அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் பெயரில் முறையான அனுமதியின்றி “சிலர்” முறைகேடாக நிதி திரட்டுவதாக விஸ்வ இந்து பரிஷத் (VHP) ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறை, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தனர்.
வி.ஹெச்.பி.,யின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், கோயில் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற போர்வையில் பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கும் நபர்களுக்கு இரையாகிவிடக்கூடாது என்று எச்சரித்தார். உத்தரப்பிரதேச காவல்துறைத் தலைவருக்கு அனுப்பப்பட்ட புகாரை எக்ஸ் தளத்தில் வினோத் பன்சால் பகிர்ந்துள்ளார், அதன் நகல் யோகி ஆதித்யநாத் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
“ஜாக்கிரதை! ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் போலி ஐ.டி.,யை வைத்துக்கொண்டு சிலர் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்,” என்று வினோத் பன்சால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"நம்பிக்கை விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச டி.ஜி.பி, லக்னோ ரேஞ்ச் ஐ.ஜி.,க்கு முறையான புகாரை அனுப்பியுள்ளோம்" என்று வி.ஹெச்.பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் மற்றொரு பதிவில் தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோவிலில் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்காக தனி குழு அமைத்து நிதி சேகரிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சமூக வலைதளத்தில் வி.ஹெச்.பி முன்பு தெரிவித்திருந்தது.
"அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமி கோவிலில் (வரவிருக்கும்) கும்பாபிஷேக விழாவிற்காக நிதி சேகரிக்க, தனி குழு அமைத்து ரசீதுகளை அச்சிட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை" என்று வி.ஹெச்.பி பொதுச் செயலாளர் மிலிந்த் பரண்டே கூறினார்.
"இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று மிலிந்த் பரண்டே டிசம்பர் 22 அன்று கூறியிருந்தார்.
source https://tamil.indianexpress.com/india/vhp-warns-people-against-fraudsters-collecting-money-in-name-of-ayodhya-temple-trust-2059256