திங்கள், 4 மார்ச், 2024

சீர்காழி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார்!

 

மயிலாடுதுறையில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து ரயில் மூலம் சீர்காழி சென்றடைந்தார். காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 4) காலை 10 மணிக்கு திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் கலந்துக்கொள்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று (மார்ச் 3) மாலை 4.15 மணிக்கு திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து, நேற்று இரவு 8.15 மணிக்கு சீர்காழி சென்றடைந்தார். அவருக்கு ரயில் நிலையத்தில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு கார்மூலம் மயிலாடுதுறை சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்வை முடித்து விட்டு, மதியம் 1 மணியளவில் திருச்சி – சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கும் மீண்டும் சென்னை வந்தடைகிறார். முதலமைச்சரின் இந்த ரயில் பயணம் காரணமாக சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/chief-minister-m-k-reached-sirkazhi-stalin-mayiladuthurai-district-collectors-office-inaugurated.html