திங்கள், 18 மார்ச், 2024

தேர்தல் பத்திர விவகாரத்தில் விளையாடுகிறீர்களா?” எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

தேர்தல் பத்திரம் மூலம் பங்களிப்புகளைப் பெற்ற அரசியல் கட்சிகளின் அனைத்து விவரமும் வெளியிட வேண்டும் என எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது.  இதனைத்தொடர்ந்து,  தேர்தல் பத்திர விவரங்களை வழங்க கூடுதல் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி மனு தாக்கல் செய்தது.  இந்த மனு மீதான விசாரணை,  தலைமை நீதிபதி சந்திரசூட்,  நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,  பி.ஆர்.கவாய்,  ஜெ.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் மார்ச் 11 ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது,  நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது.  அதற்கு காலஅவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.  ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட்,  “தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.பி.ஐ. மூன்று நாட்களுக்குள் வழங்க வேண்டும்.  அந்த விவரங்களை 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.  உத்தரவை செயல்படுத்த தவறினால்,  எஸ்.பி.ஐ. அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து,  கடந்த மார்ச் 12-ம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது.

தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 14 ஆம் தேதி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.  அதில் 2019 ஏப்ரல் முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வழங்கிய விவரங்கள் தேதி வாரியாக இடம் பெற்றுள்ளன.  மேலும் தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து பாஜக,  காங்கிரஸ்,  திரிணாமுல் காங்கிரஸ்,  திமுக,  அதிமுக உள்ளிட்ட எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதில்,  வேதாந்தா நிறுவனம்,  முத்தூட் பைனான்ஸ் நிறுவனம்,  டி.வி.எஸ் நிறுவனம்,  சன் ஃபார்மா,  மேகா இன்ஜினியரிங்,  பஜாஜ் ஆட்டோ,  பஜாஜ் பினான்ஸ்,  பாரதி ஏர்டெல்,  பாரதி இன்ப்ரா டெல்,  பினோலெக்ஸ் கேபிள் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை நன்கொடைகளாக வழங்கி உள்ளன.  மேலும் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான டி.எல்.எஃப் நிறுவனமும் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அரசியல் கட்சிகளுக்கு வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில்,  தேர்தல் பத்திரம் தீர்ப்பில் சில திருத்தங்கள் கோரி தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்தது.  இந்நிலையில்,  இந்த மனு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை வந்தது.

இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது :

“கடந்த முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,  SBI ஏன் பத்திர எண்களை வெளியிடவில்லை? உச்சநீதிமன்ற உத்தரவிற்காக ஏன் காத்திருக்க வேண்டும்.  முதல் உத்தரவில் அனைத்து தரவுகளும் வெளியிட வேண்டும் என்று தெளிவாக உள்ளதே. வங்கியின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை.  அனைத்து தரவுகளையும் வெளியிட வேண்டும் என்று தானே உத்தரவிட்டுள்ளோம்  இதில் என்ன சந்தேகம் உள்ளது, நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா ?”  இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

SBI தரப்பு மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கூறியதாவது :

“நீதிமன்றத்துடன் நாங்கள் விளையாடவில்லை.  நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்று விவரிக்க விரும்புகிறோம்.  அந்தப் புரிதல் படியே தரவுகள் வெளியிடப்பட்டது.  ஏற்கனவே தேர்தல் பத்திரம் பணமாக்கப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சிகள் விவரங்களை வெளியிட்டுள்ளன.  அப்படி இருக்கையில் வங்கி பத்திர எண்கள் வெளியிடுவது அயவசியமானதா? ” இவ்வாறு SBI தரப்பு மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்தார்.

இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் உத்தரவிட்டதாவது :

தேர்தல் பத்திர எண் வெளியிடப்பட வேண்டும்.  தேர்தல் பத்திரம் மூலம் பங்களிப்புகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் என அனைத்து விவரமும் எஸ்.பி.ஐ வெளியிட வேண்டும்.  மார்ச் 21 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் எஸ்.பி.ஐ கொடுக்க வேண்டும், அதனை பெற்றவுடன் தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வாங்கப்பட்ட தேதி,  பெயர்,  சீரியல் எண்கள், ஆல்ஃபா Numeric எண்கள் உள்ளிட்டவை என அனைத்து தரவுகளும் வெளியிட வேண்டும்.  வெளியிட்ட பின்னர், எந்தத் தரவுகளும் விடுபடவில்லை என SBI நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பிராமணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்”

இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட 5 நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


source https://news7tamil.live/s-through-election-bonds-supreme-court-orders-sbi.html

Related Posts: