பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே குடியிருந்தால் கூட பாஜகவிற்கு வாக்குகள் கிடைக்காது என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை விளக்கும் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் எம்.பி. கனிமொழி உரையாற்றியதாவது :
“மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்களுக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரும்போது எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதற்கு பதிலடியாக நிதியை வழங்காமல், அமைச்சர்களை மிரட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். நாங்கள் கலைஞரின் பிள்ளைகள். பிரதமர் இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார். தினமும் இங்கேயே குடியிருந்தால் கூட பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்கப்போவதில்லை.மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளபோவதில்லை. தமிழ்நாட்டிற்கு வந்து விட்டு செல்கிறாரே தவிர, தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட கொடுப்பதில்லை. தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கிறார். தூத்துக்குடியில் வ.உ.சி. துறைமுகம், வெளி துறைமுகங்களை விரிவுபடுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் ரூ.23,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தேர்தலுக்காக தற்போது அவசர அவசரமாக வந்து ரூ.7,000 கோடியில் அடிக்கல் நாட்டி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தமிழ் விரோதிகள், தமிழ்நாட்டு விரோதிகளான பாஜகவை அகற்றுவதே முதலமைச்சர் பிறந்தநாளுக்கு நாம் கொடுக்கும் பரிசு”
இவ்வாறு எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/even-if-prime-minister-modi-lives-in-tamil-nadu-bjp-will-not-vote-kanimozhi-mp.html