திங்கள், 18 மார்ச், 2024

பிரதமரின் பயணத்திற்கேற்ப தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது” – கார்த்தி சிதம்பரம் எம்.பி !

 

பிரதமர் மோடியின் பயணத்திற்கேற்ப தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விஜய் இளஞ்செழியன் குடும்ப நிகழ்ச்சியில்  காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கலந்துக் கொண்டார். அதன்பின்   காங்கிரஸ் எம்பி  கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :

“பாஜக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளது. தேர்தல் பத்திர முறைகேடு குறித்து உச்சநீதிமன்ற உத்தரவால்  பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது. தேர்தல் பத்திர முறைகேடு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

எதற்காக இந்த நாடாளுமன்ற தேர்தலை ஒன்றரை மாதம் நடத்துகிறார்கள். மோடியின் தேர்தல் சுற்றுப்பயண விவரங்களை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு அந்த பயணத்தை அடிப்படையாக கொண்டே தேர்தல் தேதிகளை அமைத்து இருக்கிறார்கள். இந்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒரே நாடு ஒரே கட்டம் ஒரே நாள் தேர்தலாக நடத்த வேண்டும்.

அமலாக்கத்துறை என்பது பாஜகவிற்கு சாதகமாக செயல்படும் துறையாக திகழ்ந்து வருகிறது. டெல்லி முதலமைச்சர் மீது வழக்கு பதிவு செய்வது, அமலாக்கத் துறையில் ஆஜராக சம்மன் அனுபவது ஆகியவை அவரை மிரட்டுவதற்காக படுத்தப்படும் ஒரு கருவியாக அமலாக்கத் துறை உள்ளது. இதனை நீதிமன்றம் தான் தடுக்க வேண்டும்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி I.N.D.I.A. கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான I.N.D.I.A. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்”

இவ்வாறு  காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.


source https://news7tamil.live/election-date-announced-according-to-prime-ministers-money-congress-mp-karti-chidambaram-interview.html#google_vignette