திங்கள், 8 ஜூலை, 2024

ஓமலூரில் மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்

 

ஓமலூர் அருகே மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் சேகரித்த தரவுகள் குறித்தும், அடுத்த கட்ட ஆய்வுக்கான திட்டமிடல் குறித்த கூட்டம் நடைபெற்றது. 

சேலம் டிராவின் அறிவியல் மன்றம் சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் என 100 பங்கேற்பாளார்கள் மூலம் கடந்த மே மாதம் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை அன்னூரில் ASE-NSBE-SET 2024 எனும் ஆராய்ச்சி செயற்கைக் கோளை உருவாக்கி விண்ணில் செலுத்தினார்கள்.

இந்த செயற்கைக்கோள் இந்தியாவில் முதன் முறையாக விண்ணில் 35 கிமீ வரை சென்று பல்வேறு வகையான தகவல்களை சேகரித்து அனுப்பியது. இதில், 9 வகையாக சேகரித்த தரவுகள் குறித்து விளக்கம் அளித்திடவும், மேலும் அடுத்த கட்ட ஆய்வு குறித்து திட்டமிடவும் கலந்தாலோசனை கூட்டம் ஓமலூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

மேலும், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்களின் அறிவியல் ஆய்வுகள் சிந்தனைகள், அவர்களை போல எவ்வாறு நாம் உருவாவது என்பது குறித்து பேசப்பட்டது. இதில், விண்ணில் செயற்கைகோள் செல்வது, அதன் செயல்பாடு, அதன் ஆய்வுகள் குறித்து செயல்விளக்க படமும் காண்பிக்கப்பட்டது.

இதுகுறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் இங்கர்சால் கூறியதாவது :

“மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து கியூப் சாட் என்ற செயற்கை கோளை, ஹீலியம் பலூன் மூலம் அனுப்பி சாதனை படைத்தனர். அந்த சாட்டிலைட் 3 மணி நேரம் 30 நிமிடம் பயணித்து நமக்கு அனுப்பியுள்ள அரிதான தகவல்களை மாணவர்கள், பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது” இவ்வாறு தெரிவித்தார்.


source https://news7tamil.live/satellite-developed-students-omalur-meeting-coimbatore.html

Related Posts: