திங்கள், 16 செப்டம்பர், 2024

20ம் தேதி வரை #Manipur – ல் இணைய சேவைக்கான தடை நீட்டிப்பு!

 

manipur, no internet,

மணிப்பூரில் 5 மாவட்டங்களில் 20ம் தேதி வரை இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி நடந்த வன்முறை சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டனர்,12 பேர் காயமடைந்தனர். இதனால் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆளூநர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் மாணவர்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 60 பேர் காயமடைந்தனர்.


இதனிடையே வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு 10ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை இணைய வசதிகள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழலை கருத்தில் கொண்டு, அங்கு இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபால், பிஸ்னுபூர் மற்றும் கக்சிங் ஆகிய 5 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி வரை இணைய சேவைக்கான தடை நீடிக்கும் என மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


source https://news7tamil.live/manipur-internet-ban-extended-5-districts.html

நீர்நிலைகளில் கட்டுமானக் கழிவுகள் கொட்டினால் அபராதம்; கண்காணிப்பு குழு அமைத்த சென்னை மாநகராட்சி

 

greater chennai corporation

நீர்நிலைகளில் கட்டுமானக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் விதிகளை மீறி ஆங்காங்கே கட்டுமான இடிபாட்டு கழிவுகளை கொட்டி வருகின்றனர். மேலும் கட்டுமான கழிவுகளை நீர்நிலைகளிலும், நீர் வழித்தடங்களிலும் கொட்டுகின்றனர். இந்தக் கட்டுமான கழிவுகள் மழைநீர் வடிகால்களில் அடைப்பை ஏற்படுத்தி, வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்வழித்தடங்களிலும் கட்டுமானக் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் மழைநீர் எளிதாக செல்ல முடியாமல் தடை ஏற்பட்டு, தண்ணீர் தேங்கும் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் இந்தக் கட்டுமான கழிவுகள் ஆங்காங்கே கொட்டிக் கிடப்பதால், நகரின் ஒழுக்கமும் பொலிவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கட்டுமானக் கழிவுகளை கொட்ட வேண்டும். விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளை பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மேலும், விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளை கொட்டினால், அது தொடர்பாக 1913 என்ற மாநகராட்சியின் தொலைபேசி புகார் எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும், அவ்வாறு கிடைக்கப்பெறும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், விதிகளை மீறி அடிக்கடி கட்டுமானக் கழிவுகளை கொட்டும் இடங்களை கண்காணித்து, நீர்நிலைகளில் கொட்டுவதை தடுக்கவும் 3 கண்காணிப்பு குழுக்களை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. இந்தக் குழுக்கள் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க 3 ரோந்து வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-corporation-set-surveillance-team-to-monitor-dumping-construction-waste-in-water-bodies-7070359

பன், கிரீம் - ஜி.எஸ்.டி; வரி முறையை சீரமைக்க வலுக்கும் கோரிக்கை

 

சரக்கு மற்றும் சேவை வரி முறையின் கீழ் உள்ள பல விகிதக் கட்டமைப்பின் காரணமாக வணிகங்கள் எதிர்கொள்ளும் வரி முரண்பாடுகள் ஒரு வேதனையான புள்ளியாக தொடர்கிறது.


சில நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பில், கோயம்புத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல்களின் நிர்வாக இயக்குநர் டி.சீனிவாசன், பன் மற்றும் கிரீம் பன்களுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்களில் உள்ள வேறுபாடுகள் தொடர்பாக தற்போதைய மறைமுக வரி முறையின் சில அம்சங்களையும் சுட்டிக்காட்டினார். "தற்போது வாடிக்கையாளர்கள் ரொட்டி மற்றும் க்ரீம் தனித்தனியாக வேண்டும் என்று கூறுகிறார்கள், பணத்தை மிச்சப்படுத்த க்ரீமை தாங்களே தடவிக் கொள்கிறோம் என்று கூறுகிறார்கள்," என்று சீனிவாசன் கூறியதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இது ஒரு தனித்துவமான உதாரணம் அல்ல. உண்மையில், கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் வந்துள்ளன. உதாரணமாக, ஒரு உணவகத்தில் விற்கப்படும் மற்றும் உண்ணப்படும் பீட்சாவுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும், அதே நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யப்படும் பீட்சாவுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும். நெஸ்லேவின் கிட்கேட் சாக்லேட்டா அல்லது பிஸ்கட்டா என்பது மற்றொரு பிரச்சினை. ஆங்கில செய்தித் தாளில் வெளிவந்த தலையங்கம் ('ரேஷனலைஸ் தி விகிதங்கள்', IE, ஆகஸ்ட் 24) தற்போதைய வரி முறையின் சில தனித்தன்மைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. "பாலுக்கு ஜி.எஸ்.டி.,யை விதிக்காததற்கு எந்த தர்க்கமும் இல்லை, ஆனால் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடருக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது, மற்றும் வெண்ணெய் மற்றும் நெய்க்கு 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது" என்று தலையங்கம் கூறியது, "காய்கறி கொழுப்புக்கு (உணவு எண்ணெய்) 5 சதவிகிதம் வரி விதிக்கப்படும் போது பால் கொழுப்பின் மீது 12 சதவிகிதம் வரி விதிப்பதும் ஒரு ஒழுங்கின்மை" என்று தலையங்கம் சுட்டிக்காட்டியது.

மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பது குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. உண்மையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காப்பீட்டின் மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்பது "வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு" வரி விதிப்பதை திரும்ப பெற வலியுறுத்துகிறார். ('நிதின் கட்கரி நிதியமைச்சரை ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான 18% ஜி.எஸ்.டி.,யை திரும்பப் பெற வலியுறுத்துகிறார்', ஐ.இ. ஆகஸ்ட் 1).

ஜி.எஸ்.டி கட்டமைப்பிற்கு மாறுவதற்கு முன் நடந்த விவாதங்களில், இறுதியில் ஒப்புக்கொள்ளப்பட்ட பல விகிதக் கட்டமைப்பிற்கு மாறாக, ஒரே வரிவிதிப்பு முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவாக பலர் வாதிட்டனர். உதாரணமாக, விஜய் கேல்கர் தலைமையிலான 13வது நிதிக் குழு, 12 சதவீதம் (மத்திய ஜி.எஸ்.டி.,க்கு 5 சதவீதம் மற்றும் மாநில ஜி.எஸ்.டி.,க்கு 7 சதவீதம்) என்ற ஒற்றை விகிதத்தை பரிந்துரைத்தது.

பல விகிதக் கட்டமைப்பு இணக்கச் சுமையை அதிகரிக்கிறது, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடினமாக இருக்கிறது. பல எடுத்துக்காட்டுகள் காட்டப்பட்டுள்ளதால், பொருட்களை வகைப்படுத்துவது தொடர்பான சிக்கல்களுக்கு இது வழிவகுக்கிறது மற்றும் வாடகை தேடும் வாய்ப்பை அதிகரிக்கிறது. வணிகங்களைப் பொறுத்தவரை, இது மிகவும் திறம்பட வேறு இடங்களில் பயன்படுத்தக்கூடிய விலைமதிப்பற்ற வளங்களைத் திசைதிருப்புவது மட்டுமல்லாமல், வழக்குக்கான சாத்தியத்தையும் எழுப்புகிறது.

வருவாய் நடுநிலை விகிதம் குறித்த தலைமைப் பொருளாதார ஆலோசகரின் அறிக்கை மூன்று-விகிதக் கட்டமைப்பைப் பரிந்துரைத்துள்ளது - பொருட்களின் மீதான குறைந்த விகிதம், சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான நிலையான விகிதம் மற்றும் பொருட்களின் மீதான உயர் விகிதம். இருப்பினும், நடுத்தர காலத்திற்கு ஒரு-விகித கட்டமைப்பிற்கு மாற்றுவதற்கு ஆதரவாக அறிக்கை வாதிட்டது. தற்போதைய ஜி.எஸ்.டி கட்டமைப்பில் ஐந்து முக்கிய விகித அடுக்குகள் உள்ளன: 0, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம். மேலும் இழப்பீடு செஸ் வரியும் உண்டு.

பல விகிதக் கட்டமைப்பால் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, பலர் வரி அடுக்குகளைக் குறைப்பதற்கு ஆதரவாக வாதிட்டனர். ஜி.எஸ்.டி கவுன்சில் இந்த விவகாரத்தை அமைச்சர்கள் குழுவிற்கு பரிந்துரைத்துள்ள நிலையில், விகிதக் கட்டமைப்பை சீரமைப்பு செய்வதில் சில தயக்கங்கள் இருப்பதாகத் தெரிகிறது. பிரச்சினையில் முன்னேறாமல் இருப்பது விவேகமான தேர்வாக இருக்காது. ஆங்கில செய்தித் தாளில் வெளியான ஒரு தலையங்கம், “விகித சீரமைப்புப் பயிற்சி தொடர வேண்டும், 12 மற்றும் 18 சதவீத அடுக்குகளை ஒன்றிணைப்பது உள்ளிட்ட வரி அடுக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பது மட்டுமல்லாமல், அமைப்பில் உள்ள முரண்பாடுகள் தொடர்பான விமர்சனங்களை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு ஸ்லாப்பில் உள்ள பொருட்களையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டது.

இந்தியாவைப் போலல்லாமல், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள், மிகவும் எளிமையான வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளன. உலக வங்கியின் இந்திய மேம்பாட்டுப் புதுப்பிப்பு 2018 இன் படி, வங்கியால் ஆய்வு செய்யப்பட்ட 115 நாடுகளில், 49 நாடுகள் ஒரே வரி விகிதத்தை விதிக்கத் தேர்வு செய்தன, அதே நேரத்தில் 28 நாடுகள் இரண்டு-விகிதக் கட்டமைப்பைக் கொண்டிருந்தன. இத்தாலி, லக்சம்பர்க், பாகிஸ்தான், கானா மற்றும் இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் மட்டுமே நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட அடுக்குகள் உள்ளன.

பல ஆண்டுகளாக, ஜி.எஸ்.டி வரி அடிப்படையில் ஒரு நிலையான விரிவாக்கம் உள்ளது. ஜூன் 2024 நிலவரப்படி, மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 1.4 கோடியாக இருந்தது, ஜி.எஸ்.டி.,க்கு முந்தைய முறையில் இருந்து 42.5 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த மறைமுக வரி முறையின் கீழ், வசூல் 2018-19ல் ரூ.11.77 லட்சம் கோடியிலிருந்து 2023-24ல் ரூ.20.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதனுடன், ஜி.எஸ்.டி கவுன்சில், வரி அமைப்பில் இருந்து கசிவுகளைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வரி விகித சீரமைப்பு பற்றிய சர்ச்சைக்குரிய பிரச்சினையில் கவுன்சில் இப்போது முன்னேற வேண்டும்.


source https://tamil.indianexpress.com/explained/bun-cream-gst-nirmala-sitharaman-annapoorna-7070273

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

முதலமைச்சர் #MKStalin-ன் அமெரிக்க பயணம் – தமிழ்நாட்டிற்கு கிடைத்த முதலீடுகளின் முழு விவரம்!

 

முதலமைச்சர் #MKStalin-ன் அமெரிக்க பயணம் – தமிழ்நாட்டிற்கு கிடைத்த முதலீடுகளின் முழு விவரம்! 15 09 2024

முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த முதலீடுகள் குறித்த முழு விவரங்களை விரிவாக காணலாம்.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ போன்ற போன்ற முக்கிய நகர்களுக்கு சென்று அங்குள்ள உலகின் முன்னணி நிறுவனங்களை சார்ந்த தலைமைச் செயல் அதிகாரிகளை சந்தித்தார்.

இதேபோல மைக்ரோசாப்ட் , கூகுள் மற்றும் போன்ற நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். இதன் ஒருபகுதியாக கூகுள் நிறுவனத்தோடு புரிந்துணர்வு கையெழுத்தானது. இதேபோல 19 முக்கிய நிறுவனங்களுடன் தொழில்புரிவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்மூலம் கிட்டத்தட்ட 7616 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில்கள் துவங்கப்படும் எனவும் 11,500 நபரகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பயணம் மூலம் ஈா்க்கப்பட்ட முதலீடுகள்

  • ஜாபில் ரூ. 2,000 கோடி
  • ட்ரில்லியன்ட் ரூ. 2,000 கோடி
  • ராக்வெல் ஆட்டோமேஷன் ரூ. 666 கோடி
  • லிங்கன் எலக்ட்ரிக் ரூ. 500 கோடி
  • கேட்டா்பில்லா் ரூ. 500 கோடி
  • நோக்கியா ரூ. 450 கோடி
  • ஓமியம் ரூ. 400 கோடி
  • விஸ்டன் ரூ. 250 கோடி
  • மைக்ரோ சிப் ரூ. 250 கோடி
  • ஈட்டன் ரூ. 200 கோடி
  • ஈல்ட் என்ஜினியரிங் சிஸ்டம்ஸ் ரூ. 150 கோடி
  • ஆா்ஜிபிஎஸ்ஐ ரூ. 100 கோடி

  • விஷய் பிரிசிஷன் ரூ. 100 கோடி
  • இன்பிங்ஸ் ரூ. 50 கோடி
  • அப்ளைடு மெட்டீரியல்ஸ் — 500
  • பேபால் 1,000
  • கூகுள் – செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் நிறுவ புரிந்துணா்வு ஒப்பந்தம்
  • ஃபோா்டு – புதுப்பிக்க அழைப்பு
  • அஷ்யூரண்ட் – சென்னையில் உலகளாவிய திறன் மையம்
  • நைக் – உற்பத்தி விரிவாக்கத்துக்காக ஆலோசனை
  • ஆப்டம் – புதிய தொழில் முதலீட்டுக்காக அழைப்பு
  • ஐடிசா்வ் – புதிய தொழில் முதலீட்டுக்காக அழைப்பு
  • பிஎன்ஓய் லெமன் – புதிய தொழில் முதலீட்டுக்காக அழைப்பு
  • ஆட்டோடெஸ்க் – இளைஞா்களுக்கு திறன் மேம்பாடு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் வலுப்படுத்துதல்.


source https://news7tamil.live/chief-minister-mkstalins-us-visit-full-details-of-investments-received-in-tamil-nadu.html

வரலாற்றின் முதல் விண்வெளி சுற்றுலா | பயணத்தை முடித்துக்கொண்டு பத்திரமாக பூமிக்கு திரும்பிய 4 தொழிலதிபர்கள்

 15 09 2024

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் குழு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தனியார் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் மூலம் 5 நாட்கள் விண்வெளி சுற்றுலா சென்ற 4 பேர் சுற்றுலா முடிந்து வெற்றிகரமாக திரும்பியுள்ளனர்.எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனியார் விண்வெளி பயணத்தை கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கியது. பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட போலரிஸ் டான் என்ற ஸ்பேஸ் விமானம் மூலம் ஃபால்கன் 9 என்ற ராக்கெட்டில் “ஐசக்மேன், ஸ்கார் போடீட், ஷாரா கில்லீஸ், அன்னா மேனன்” ஆகிய 4 பேர் விண்வெளிக்குச் சென்றனர்.

வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றபின் செப்டம்பர் 12-ம் தேதி மாலை 4.22 மணிக்கு கேப்ஸ்யூலில் இருந்து வெளியேறிய ஜாரெட் ஐசக்மேன் என்பவர், முதல் நபராக விண்நடை மேற்கொண்டார். அதன்மூலம் ஸ்பேஸ் வாக் சென்ற முதல் மனிதர் என்ற பெருமையை அமெரிக்காவை சேர்ந்த ஐசக்மேன் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் 5 நாட்களாக நீடித்த விண்வெளி சுற்றுலா பயணம் முடிந்து 4 பேரும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக விண்வெளி வீரர்கள் அல்லாதவர்கள் விண்ணுக்கு சென்று விண்நடை மேற்கொண்டது பெரிய விசயமாக பார்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் விண்வெளிக்கு செல்லலாம் என்பதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிரூபித்துக் காட்டியுள்ளது.



source https://news7tamil.live/historys-first-space-tour-4-businessmen-who-completed-the-journey-and-returned-to-earth-safely.html

யாகி புயல்: ஆசியாவில் இந்தாண்டின் மிகவும் சக்திவாய்ந்த புயல்

 

யாகி புயல்: ஆசியாவில் இந்தாண்டின் மிகவும் சக்திவாய்ந்த புயல் 15 09 2024


source https://tamil.indianexpress.com/explained/typhoon-yagi-most-powerful-storm-in-asia-this-year-7069996 Typhoon Yagi

யாகி புயல் பிலிப்பைன்ஸ், சீனா, லாவோஸ், மியான்மர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளை கடுமையாக பாதித்துள்ள நிலையில்,  இது வியட்நாமை மிகவும் மோசமாக பாதித்துள்ளது, அங்கு மழை, வெள்ளம், புயலில் சிக்கி  சுமார் 233 பேர் உயிரிழந்துள்ளனர். 


தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், யாகி புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர் - இந்த ஆண்டு ஆசியா கண்ட வலிமையான வெப்பமண்டல சூறாவளி மற்றும் பெரில் சூறாவளிக்குப் பிறகு இந்த ஆண்டு இதுவரை உலகில் இரண்டாவது மிக சக்திவாய்ந்த புயலாக இது உள்ளது. 

புயல் எவ்வாறு உருவாகிறது? 

வெப்பமண்டல சூறாவளிகள் பூமத்திய ரேகைக்கு அருகில் சூடான கடல் நீரில் உருவாகின்றன. கடல் மேற்பரப்பில் இருந்து சூடான, ஈரமான காற்று மேல்நோக்கி உயரும் போது, ​​குறைந்த காற்றழுத்த பகுதி கீழே உருவாகிறது. அதிக காற்றழுத்தம் உள்ள பகுதிகளிலிருந்து வரும் காற்று இந்த குறைந்த அழுத்தப் பகுதிக்குள் விரைகிறது, இறுதியில் அது சூடாகவும் ஈரமாகவும் மாறிய பிறகு உயரும்.

சூடான, ஈரமான காற்று உயரும் போது, ​​அது குளிர்ச்சியடைகிறது, மேலும் காற்றில் உள்ள நீர் மேகங்கள் மற்றும் இடியுடன் கூடிய மழையை உருவாக்குகிறது. மேகங்கள் மற்றும் காற்றின் இந்த முழு அமைப்பும் கடலின் வெப்பம் மற்றும் அதன் மேற்பரப்பில் இருந்து ஆவியாகும் நீரைப் பயன்படுத்தி வலிமையையும் வேகத்தையும் பெறுகிறது.

யாகி புயல் எப்படி ஆசியாவின் வலிமையான புயலாக மாறியது?

யாகி சூறாவளி செப்டம்பர் 1 ஆம் தேதி மேற்கு பிலிப்பைன்ஸ் கடலில் வெப்பமண்டல புயலாக தொடங்கியது. அது மறுநாள் பிலிப்பைன்ஸில் கரையைக் கடந்தது மற்றும் வலுவிழக்கத் தொடங்கியது. எனினும், தென் சீனக் கடலில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் நிலவியதால், புயல் மீண்டும் தீவிரமடைந்தது. செப்டம்பர் 4 ஆம் தேதி, இது 3 வகை காற்றுடன் வலுவான சூறாவளியாக வலுப்பெற்றது.

அடுத்த நாள், இது ஒரு வகை 5 சூறாவளியாக மாறியது, அதிகபட்சமாக மணிக்கு 260 கிமீ வேகத்தில் காற்று வீசியது - தென் சீனக் கடலில் 1954-ல் பமீலா, 2014ல் ரம்மசுன் மற்றும் 2021 ல் ராய்க்குப் பிறகு பதிவான நான்கு வகையான 5 புயல்களில் யாகி புயலும் ஒன்றாகும்.

காலநிலை மாற்றம் புயலை தீவிரமாக்குகிறதா?

காலநிலை மாற்றம் வெப்பமண்டல சூறாவளிகளை எவ்வாறு சரியாக பாதிக்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் இன்னும் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை. ஏனென்றால், புயல் உருவாகிறதா, அது எவ்வாறு உருவாகிறது, அதன் வலிமை, காலம் மற்றும் ஒட்டுமொத்த பண்புகள் ஆகியவற்றை தீர்மானிக்கும் காரணிகள் நிறைய உள்ளன.

இருப்பினும், அதிகரித்து வரும் உலக வெப்பநிலையுடன், வெப்பமண்டல சூறாவளிகள் மிகவும் தீவிரமடைந்து வருகின்றன என்று ஒருமித்த கருத்து உள்ளது. எடுத்துக்காட்டாக, இந்த ஆண்டு ஜூலையில் காலநிலை மற்றும் வளிமண்டல அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தென்கிழக்கு ஆசியாவில் வெப்பமண்டல சூறாவளிகள் இப்போது கடற்கரையோரங்களுக்கு நெருக்கமாக உருவாகி, மிக வேகமாக தீவிரமடைந்து, நிலத்தில் நீண்ட காலம் நீடிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.


ஸ்ரீ விஜய புரம்’

 

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயர் இனி ‘ஸ்ரீ விஜய புரம்’ என அழைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். பெயரை மாற்றும் முடிவு "தேசத்தை காலனித்துவ முத்திரைகளில் இருந்து விடுவிக்கும்" பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டதாக அமைச்சர் அமித் ஷா கூறினார்.

"முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ஸ்ரீ விஜய புரம் நமது சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும்,  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது" என்று அமித் ஷா கூறினார்.

போர்ட் பிளேயர் என்ற பெயர் எப்படி வந்தது?

போர்ட் பிளேயர் நகரம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் நுழைவுப் புள்ளியாகும். இது பம்பாய் மரைனில் கடற்படை சர்வேயர் மற்றும் லெப்டினன்ட் ஆக இருந்த ஆர்க்கிபால்ட் பிளேயர் என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகளை முழுமையாக ஆய்வு செய்த முதல் அதிகாரி ஆர்க்கிபால்ட் பிளேயர் ஆவார்.

1771 ஆம் ஆண்டில் பாம்பே மரைனில் சேர்ந்த பிறகு, ஆர்க்கிபால்ட் பிளேயர் அடுத்த ஆண்டு இந்தியா, ஈரான் மற்றும் அரேபியாவின் கடற்கரைகளில் ஆய்வுப் பணியைத் தொடங்கினார். 1780களின் பிற்பகுதியில், சாகோஸ் தீவுக்கூட்டம், கல்கத்தாவின் தெற்கில் அமைந்துள்ள டயமண்ட் துறைமுகம் மற்றும் ஹூக்ளி ஆற்றங்கரையில் உள்ள பல ஆய்வுப் பணிகளில் ஆர்க்கிபால்ட் பிளேயர் பங்கேற்றார்.

1778 டிசம்பரில், எலிசபெத் மற்றும் வைப்பர் ஆகிய இரண்டு கப்பல்களுடன் கல்கத்தாவிலிருந்து அந்தமானுக்கு தனது முதல் ஆய்வுப் பயணத்திற்கு ஆர்க்கிபால்ட் பிளேயர் புறப்பட்டார். ஏப்ரல் 1779 வரை நீடித்த இந்தப் பயணத்தில், அவர் தீவின் மேற்குக் கடற்கரையைச் சுற்றிக் கொண்டு, அதன் மூலம் வடக்கே கிழக்குக் கடற்கரை வழியாகப் பயணம் செய்து, இயற்கைத் துறைமுகத்தை அடைந்தார், ஆர்க்கிபால்ட் பிளேயர் அந்த இடத்திற்கு ஆரம்பத்தில் போர்ட் காரன்வாலிஸ் (பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி வில்லியம் காரன்வாலிஸ்) என்று பெயரிட்டார்.. பின்னர் தீவு ஆர்க்கிபால்ட் பிளேயர் பெயரில் மறுபெயரிடப்பட்டது. ஆர்க்கிபால்ட் பிளேயர் தனது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை உடனடியாக அறிந்திருந்தார் மற்றும் அவரது ஆய்வின் விரிவான அறிக்கையை எழுதினார், இது கிழக்கிந்திய கம்பெனி (EIC) அதிகாரிகளால் மிகவும் விருப்பமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விரைவில், கிழக்கிந்திய கம்பெனி அந்தமான் தீவுகளை காலனித்துவப்படுத்த முடிவு செய்தது, முக்கியமாக மலாய் கடற்கொள்ளையர்களின் செயல்பாடுகளை கண்டறிய பாதுகாப்பான துறைமுகமாக நிறுவப்பட்டது. இந்த தீவு கப்பல் விபத்தில் சிக்கிய மக்களுக்கு புகலிடமாகவும், மற்ற சக்திகளுடன் விரோதம் ஏற்பட்டால் அவர்களது அதிகாரிகள் தஞ்சம் அடையக்கூடிய இடமாகவும் இருந்தது. பல குற்றவாளிகள் ஊதியம் பெறாத உழைப்புக்காக தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதால், தீவு விரைவில் ஒரு தண்டனை காலனியாக மாறியது.

இருப்பினும், டிசம்பர் 1792 இல், காலனி அந்தமானின் வடகிழக்கு பகுதிக்கு புதிதாக நிறுவப்பட்ட காரன்வாலிஸ் துறைமுகத்திற்கு முற்றிலும் மூலோபாய காரணங்களுக்காக மாற்றப்பட்டது. ஆனால் கடுமையான நோய் மற்றும் இறப்பு காரணமாக புதிய காலனி நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை. கிழக்கிந்திய கம்பெனி 1796 இல் அதை இயக்குவதை நிறுத்தியது.

1857 ஆம் ஆண்டின் பெரும் புரட்சியின் விளைவாக ஆங்கிலேயர்களுக்கு ஏராளமான கைதிகள் கிடைத்தனர், இது போர்ட் பிளேயரை தண்டனைக் காலனியாக உடனடியாகப் புதுப்பித்து மீள்குடியேற்றத் தூண்டியது. பெரும்பாலான குற்றவாளிகள் போர்ட் பிளேயரில் ஆயுள் தண்டனை பெற்றனர். அவர்களில் பலர் தூக்கிலிடப்பட்டனர், பலர் நோய் மற்றும் இப்பகுதியில் உள்ள மோசமான நிலைமைகள் காரணமாக இறந்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்திய சுதந்திர இயக்கம் வலுப்பெற்றதால், 1906 ஆம் ஆண்டில் இங்கு ஒரு பெரிய செல்லுலார் சிறை நிறுவப்பட்டது. காலா பானி என்று பிரபலமாக அறியப்படும் இந்த சிறை, வீர் தாமோதர் சாவர்க்கர் உட்பட பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்த சிறையாகும்.

இதற்கிடையில், ஆர்க்கிபால்ட் பிளேயர் ஏற்கனவே 1795 இல் இங்கிலாந்து திரும்பியிருந்தார், மேலும் 1799 இல் லண்டன் ராயல் சொசைட்டி முன் அந்தமான் தீவுகளின் ஆய்வறிக்கையை சமர்ப்பித்ததாக அறியப்படுகிறது.

ஏகாதிபத்திய சோழர்கள் மற்றும் ஸ்ரீவிஜயாவுடன் போர்ட் பிளேயரின் தொடர்பு என்ன?

11 ஆம் நூற்றாண்டின் சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திரனால் இன்றைய இந்தோனேசியாவில் உள்ள ஸ்ரீவிஜயா மீது தாக்குதல் நடத்த அந்தமான் தீவுகள் ஒரு மூலோபாய கடற்படை தளமாக பயன்படுத்தப்பட்டதாக சில வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன. கி.பி 1050 தஞ்சாவூரில் கிடைத்த கல்வெட்டின்படி, சோழர்கள் தீவை மா-நக்கவரம் நிலம் (பெரிய திறந்த / வெற்று நிலம்) என்று குறிப்பிட்டனர், இது ஆங்கிலேயர்களின் கீழ் நிக்கோபார் என்ற நவீன பெயருக்கு வழிவகுத்தது.

வரலாற்றாசிரியர் ஹெர்மன் குல்கே, தான் இணைந்து எழுதிய நாகப்பட்டினம் முதல் சுவர்ணத்வீபா வரை: தென்கிழக்கு ஆசியாவிற்கான சோழர்களின் கடற்படைப் பயணங்களின் பிரதிபலிப்புகள் (2010) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஸ்ரீவிஜயா மீதான சோழர் படையெடுப்பு இந்தியாவின் வரலாற்றில் ஒரு தனித்துவமான நிகழ்வாகும், மேலும் "தென்கிழக்கு ஆசியாவின் அரசுகளுடனான சோழர்களின் அமைதியான உறவுகள் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் வலுவான கலாச்சார செல்வாக்கின் கீழ் வந்தன."

ஸ்ரீவிஜயா மீதான தாக்குதலுக்கான காரணம் குறித்து பல அறிஞர்கள் ஊகித்துள்ளனர். நீலகண்ட சாஸ்திரி, சோழர்களைப் பற்றிய தனது படைப்பில், “கிழக்கு நாடுகளுடனான சோழர் வணிகத்தின் வழியில் தடைகளை ஏற்படுத்துவதற்கு ஸ்ரீவிஜயாவின் தரப்பில் ஏதேனும் முயற்சிகள் இருந்ததாக நாம் கருத வேண்டும், அல்லது அதற்கும் மேலாக, உள்நாட்டில் அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயமான, முதலாம் ராஜேந்திரன் தனது திக்விஜயத்தை கடலுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கு விரிவுபடுத்திய வகையில், வெறுமனே ஒரு ஆசை இருந்திருக்கலாம், திக்விஜயம் மூலம் ராஜேந்திர சோழன் அவரது கிரீடத்திற்கு மேலும் பிரகாசம் சேர்த்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றாசிரியர் ஜி டபிள்யூ ஸ்பென்சர் போன்றவர்கள் ஸ்ரீவிஜய பயணத்தை பல தசாப்தங்களாக தென்னிந்தியா மற்றும் இலங்கையின் பிற சாம்ராஜ்யங்களுடனான போர்களில் உச்சக்கட்டத்தை அடைந்த சோழ விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக விளக்குகிறார்கள்.

கல்வெட்டுக் குறிப்புகளின்படி, ஸ்ரீவிஜயாவைத் தாக்கிய பிறகு, முதலாம் ராஜேந்திர சோழன் சங்கராம விஜயொத்துங்கவர்மனைக் கைப்பற்றினார், மேலும் புத்த சாம்ராஜ்யத்திலிருந்து ஏராளமான பொக்கிஷங்களை கொள்ளையடித்தார், இதில் ஸ்ரீவிஜயாவின் நகைகள் நிறைந்த போர் வாசலான வித்யாதர தோரணமும் அடங்கும்.


source https://tamil.indianexpress.com/explained/port-blair-renamed-as-sri-vijaya-puram-how-the-city-got-its-name-and-its-connection-with-imperial-cholas-7069912

மத்தியில் கூட்டணி ஆட்சி நடப்பது போல் தமிழகத்திலும் நடந்தால் தவறில்லை - திருச்சியில் திருமாவளவன் பேட்டி

 Thirumavalavan Trichy airport

மத்தியில் கூட்டணி ஆட்சி நடப்பது போல் தமிழகத்திலும் நடப்பது தவறில்லை. மது ஒழிப்பு மாநாடு தேர்தல் அரசியல் என்று திசை திருப்ப முயற்சி நடக்கிறது என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; 

”வி.சி.க நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தேர்தல் அரசியலுடன் தொடர்புடையது அல்ல. சமூகப் பொறுப்பை உணர்ந்து முன்னெடுக்கப்படும் மாநாடு. இந்திய அளவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கைம்பெண்களாக துன்பத்தில் உழன்று வருகின்றனர். இந்தியாவில் மது உள்ளிட்ட போதை பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை கணக்கிலிட முடியாத அளவுக்கு உள்ளது.

தமிழகத்திலும் அந்த எண்ணிக்கை பெரிய அளவில் உள்ளது. கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, மரக்காணம் ஆகிய பகுதிகளில் சென்றபோது, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பதுதான் அனைத்து பெண்களின் கோரிக்கையாகவும் இருந்தது. பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினை குறித்து பேசுவதற்கு பதிலாக தேர்தல் அரசியல், கூட்டணி அரசியல் என்று இந்தப் பிரச்சினையை திசை திருப்புகிறார்கள், திரித்து பேசுகிறார்கள். இது வேதனையை அளிக்கிறது.

தி.மு.க கூட்டணியில் வி.சி.க தொடர்கிறது. ஆனால், சமூக பொறுப்புள்ள அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்கலாம், அ.தி.மு.க.,வும் பங்கேற்கலாம் என நான் விடுத்த அறைகூவலை, எல்லோரும் சேர்ந்து ஒருமித்த குரலை கொடுப்பதில் என்ன தவறு என்று கேட்பதற்கு பதிலாக திருமாவளவன் ஏன் அ.தி.மு.க.,விற்கு அழைப்பு விடுத்தார் என்று இதை திசை திருப்புவது பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தை அவமதிப்பது போல் ஆகும்.

எல்லோரும் ஒருமித்து குரல் கொடுக்கும் போது, ஆளும் தி.மு.க.,வும் அதே கருத்தில் இருப்பதால், அரசு மதுபானக் கடைகளை மூடுவதில் சிக்கல் இருக்காது. காவேரி நதிநீர் பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை போல மது, போதைப் பொருள் ஒழிப்பிலும் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

மது, போதை பொருள் ஒழிப்பில் தேசிய அளவில் கொள்கை வரையறுக்கப்பட வேண்டும் என்பதற்காக தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றேன். தி.மு.க உட்பட அனைவரும் அழுத்தம் கொடுத்தால் தேசிய அளவில் மது மற்றும் போதை ஒழிப்பு கொள்கை உருவாக்க முடியும். இதில் மத்திய அரசுக்கு பொறுப்பு இல்லை; மாநில அரசுகளுக்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கிறது என்பது போல ஒரு பார்வை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 2, 3-வது ஐந்தாண்டு காலத்திட்டத்தில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. அப்போது, ஸ்ரீமன் நாராயணன் தலைமையிலான குழு மதுவிலக்கு தொடர்பாக 1951-ம் ஆண்டுக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இதில் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். தேர்தல் அரசியலை அவரவர் வசதிக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம். வெறும் அரசியல் கணக்கை போட்டு பார்ப்பது இந்த பிரச்சினையின் தீவரத்தை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது. ஆகவே அனைவரும் சேர்ந்து போதையில்லா ஒரு தேசத்தை உருவாக்க முயற்சிப்போம்.

போதைப் பொருள் கடத்தலில் மாபியா கும்பல் தேசிய அளவில் தீவிரமாக செயல்படுகிறது. அயல்நாடு மற்றும் உள்நாடுகளில் மாநிலம் விட்டு மாநிலம் போதைப் பொருள் அதிகளவு கடத்தப்படுகிறது. எளிய, விளிம்பு நிலை மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பரவலாக இன்று பழக்கத்தில் உள்ளது. இவையெல்லாம் தேசத்தின் மனித வளத்தை பாழாக்குகிறது. தேசிய அளவில் மனித வள இழப்பு ஏற்படுகிறது.

எனவே, தயவு செய்து இந்த அடிப்படையில் இந்தப் பிரச்சினையை பாருங்கள். அரசியல் அடிப்படையில் பார்த்து இந்த பிரச்சனையில் தீவிரத்தை நீர்த்துப்போக செய்ய வேண்டாம். எல்.கே.ஜி படித்த எங்களுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும்.

மது ஒழிப்பு குறித்து வி.சி.க.,வை பா.ம.க விமர்சிக்கவில்லை வரவேற்க தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பா.ம.க குறித்து நான் சொல்லிய கருத்துகளை அவர் கண்டித்துள்ளார். ஆனால் அப்படிச் சொல்ல வைத்தது அவர்கள்தான். நான் முதன் முதலில் சிதம்பரத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபட்டபோது மிகப்பெரிய வன்முறை நடந்ததற்கு பா.ம.க தான் காரணம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, தமிழர் நலனுக்காக எனது தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில், பா.ம.க தலைவர் ராமதாஸ் உடன் இணைந்து பயணித்தோம். அதன் பிறகு பா.ம.க எடுத்த நிலைப்பாடு, தலித் வெறுப்பு என்பதாக அமைந்துவிட்டது.

வி.சி.க-வுக்கும், எனக்கும் எதிராக அபாண்டமான அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டது. தேசிய அளவில் பா.ஜ.க சிறுபான்மை வெறுப்பை ஏற்படுத்தியது போல, தமிழகத்தில் சிறுபான்மை அரசியலை பேச முடியாது என்பதால் தலித், தலித் அல்லாதவர் என்று பிரித்து வெறுப்பு அரசியலை விதைத்தது பா.ம.க தான்.

தேர்தல் அரசியலில் ஈடுபடத் தொடங்கியதில் இருந்து நான் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற வலியுறுத்தி உள்ளேன். இதை மறைந்த த.மா.கா தலைவர் மூப்பனார், வரவேற்று உள்ளார். அதை மேற்கோள் காட்டி மறைமலைநகர் கூட்டத்தில் நான் பேசிய வீடியோ தான் எனது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அதில் பதிவிடக்கூடிய வார்த்தைகளில் சில பிழைகள் இருந்ததால் நீக்கப்பட்டு, அந்த பிழை சரி செய்யப்பட்டு மீண்டும் அது பதிவிடப்பட்டது. அது பழைய வீடியோ அல்ல புதிய வீடியோ தான்.

1975 இல் இருந்து மத்தியில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தமிழகத்திலும் அதுபோல நடப்பதில் தவறில்லை. இது யாருக்கும் எதிராகவும் மிரட்டுவதற்காகவும் எழுப்பக்கூடிய கருத்து அல்ல. ஜனநாயக ரீதியான கோரிக்கை. ஓர் இடத்தில் அதிகாரத்தை குவிப்பது ஜனநாயகம் அல்ல. அதிகாரம் என்பது அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியது. வி.சி.க திட்டமிட்டு ஒரு காயையும் நகர்த்தவில்லை. கடைசி மக்களுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பதுதான் எனது நிலைப்பாடு. 2026 தேர்தல் வரும்போது இந்த கோரிக்கை தி.மு.க கூட்டணியில் முன்வைக்கப்படுவது குறித்து பதில் சொல்கிறேன்,” இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

க.சண்முகவடிவேல்



source https://tamil.indianexpress.com/tamilnadu/vck-leader-thirumavalavan-clarifies-about-share-in-power-at-trichy-7069953

சனி, 14 செப்டம்பர், 2024

Portblair இல்ல… இனி ஸ்ரீ விஜயபுரம்! #AndamanNicobar தீவுகளின் தலைநகர் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு!

 


No Portblair… Sri Vijayapuram! The central government decided to change the name of the capital of Andaman and Nicobar Islands!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட்பிளேரின் (Portblair) பெயரை “ஸ்ரீ விஜயபுரம்” என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

யூனியன் பிரதேசங்களின் ஒரு பகுதியான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகராக போர்ட் பிளேயர் உள்ளது. இந்நிலையில் போர்ட் பிளேயரின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“காலனித்துவ முத்திரைகளில் இருந்து தேசத்தை விடுவிக்க வேண்டுமென்கிற பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணோட்டத்தின் ஒருபகுதியாக இன்று போர்ட் பிளேயரின் பெயரை ‘ஸ்ரீ விஜய புரம்’ என்று மாற்ற முடிவு செய்துள்ளோம். முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ‘ஸ்ரீ விஜய புரம்’ நமது சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது. 

நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது மூலோபாய திட்டங்கள் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமான தளமாக விளங்குகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர நமது நாட்டின் முதல் தேசியக் கொடியை அங்குதான் ஏற்றினார். பல சுதந்திரப் போராளிகள் சுதந்திர தேசத்திற்காக போராடிய செல்லுலார் சிறையும் இதுவே” என்று குறிப்பிட்டுள்ளார். 

source https://news7tamil.live/no-portblair-sri-vijayapuram-the-central-government-decided-to-change-the-name-of-the-capital-of-andaman-and-nicobar-islands.html

ஹோட்டல் ஜி.எஸ்.டி விவகாரம்: 'முற்றிலும் அவமரியாதை; திமிர்பிடித்த அரசாங்கம்': ராகுல் காந்தி தாக்கு

 

Rahul Nirmala

Hotel GST Isssue Rahul Condemns Centre

கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், தொழில் துறையினர் சந்திப்பு நிகழ்வு செவ்வாய்க் கிழமை (செப்.11) நடந்தது.

அப்போது கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன்,  ஜிஎஸ்டி வரியில் உள்ள சிக்கல் குறித்து நிர்மலா சீதாராமனிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதிகமாக பகிர்ந்து நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்தனர். 

இதற்கு விளக்கமளித்த நிர்மலா சீதாராமன், ’ஹோட்டல் உரிமையாளர் தங்களின் பிரச்னையை ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். அதில் தவறில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை. அவரது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்’, என்றார்.

இந்நிலையில் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன்,  நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து, தனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் மற்றும் அன்னபூர்ணா சீனிவாசன் மட்டும் இருந்தனர்.

இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய  அரசின் அணுகுமுறையை விமர்சித்து, பல்வேறு எதிர்க் கட்சித் தலைவர்களும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். 

இதுகுறித்து ராகுல் காந்தி தன் X பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், ‘கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிகத்தின் உரிமையாளர், நமது அரசு ஊழியர்களிடம் எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறையைக் கேட்கும்போது, அவரது கோரிக்கை ஆணவத்துடனும் முற்றிலும் அவமரியாதையுடன் சந்திக்கப்படுகிறது.

ஆயினும், ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற அல்லது தேசிய சொத்துக்களைப் பெற முற்படும்போது, மோடி ஜி சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்.



பணமதிப்பு நீக்கம், அணுக முடியாத வங்கி முறை, வரி பறிப்பு மற்றும் பேரழிவு தரும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக அவர்கள் தகுதியானது மேலும் அவமானம் தான்.

ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான ஈகோக்கள் புண்படுத்தப்படும்போது, அவர்கள் என்ன செய்வார்கள் என்பது அவமானமாகத் தெரிகிறது.

அவர்கள் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றனர். இந்த திமிர்பிடித்த அரசாங்கம் மக்கள் சொல்வதைக் கேட்டால், ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்’, என விமர்சித்துள்ளார். 

அதேநேரம் அண்ணாமலை தன் X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ’ மத்திய நிதியமைச்சருக்கும், தொழிலதிபருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலைப் பகிர்ந்து கொண்ட எங்கள் செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக தமிழக பா.ஜ.க சார்பில் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனுடன் நான் பேசி, இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன், தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துவருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விவகாரம் குறித்து தங்கள் கண்ணோட்டங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். 


source https://tamil.indianexpress.com/india/minister-nirmala-sitharaman-annapoorna-srinivasan-hotel-gst-rahul-gandhi-7065876

ஹோட்டல் உரிமையாளருக்கு மிரட்டல்; கோவை மக்களுக்கு அவமானம்

 

Ganapathy Rajkumar

ஹோட்டல் உரிமையாளருக்கு பா.ஜ.க வினர் மிரட்டல் விடுத்து கோவை மக்களை அவமானப்படுத்தியது வன்மையானக் கண்டனத்துக்குரியது என்று தி.மு.க அவருக்கு துணை நிற்கும் கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி குறை தீர்க்கும் கூட்டத்தில் கொங்கு தமிழில் கோரிக்கை வைத்த அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளருக்கு பா.ஜ.க வினர் மிரட்டல் விடுத்து கோவை மக்களை அவமானப்படுத்தியது வன்மையானக் கண்டனத்துக்குரியது என்று தி.மு.க அவருக்கு துணை நிற்கும்  கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி குறைதீர்க்கும் கூட்டத்தில் அழகாக கொங்கு தமிழில் கோரிக்கையை முன் வைத்த அன்னபூர்ணா உணவக குழும உரிமையாளர் சீனிவாசன் மிரட்டப்பட்டதாகவும், அதன் மூலம் கோவை மக்களை அவமானப்படுத்தி உள்ளனர் எனவும் கூறி உள்ள கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இந்த சம்பவத்திற்கு வன்மையாக கண்டனம் தெரிவிப்பதுடன் சீனிவாசனுக்கு தி.மு.க துணை நிற்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் வருத்தம் தெரிவித்த தனிப்பட்ட வீடியோவை பா.ஜ.க-வினர் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக கோவை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில்  செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய தி.மு.க எம்.பி கணபதி ராஜ்குமார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கொங்கு  தமிழில் அழகாக தமது கோரிக்கையை பேசிய நிலையில் பா.ஜ.க-வினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அடுத்த நாள் அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும்,  “சூலூரில் செல்ஃபோன் உதிரிபாகங்கள் தொடர்பாக இளைஞர் ஒருவர் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கொங்கு மண்டலத்தில் அதிகமான பாதிப்பு ஜி.எஸ்.டி"யினால் தான் ஆனால் யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற தர்பார் ஆட்சி தான் தற்போது நடக்கிறது எனவும் பிஸ்கட்டிற்கு 18% ஜி.எஸ்.டி, தங்கத்திற்கு 3% ஜி.எஸ்.டி விதித்த போது அறிந்து கொள்ளலாம் இது யாருக்கான ஆட்சி” என்று கணபதி ராஜ்குமார் குறிப்பிட்டார். 

அன்னபூர்னா சீனிவாசன் வருத்தம் தெரிவிக்கும் வீடியோ அவரது அனுமதி பெற்று வெளியிடப்பட்டதா..? எனவும் அது தனி மனித சட்ட விதி மீறல் எனவும் அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுவதால் அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானப் படுத்தியது போல் உள்ளது எனவும் கணபதி ராஜ்குமார் கூறினார்.

ஜி.எஸ்.டி-யால் 30 சதவீதம் தொழிற் கூடங்கள் மூடப்பட்டு விட்டதாகவும் குறைதீர் கூட்டம் என்ற பெயரில் அவர்களின் குட்டை அவர்களே வெளிப்படுத்தி உள்ளனர் என்று கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் கூறினார்.

“பா.ஜ.க-வினர் கோவை மக்களை அவமானப்படுத்தி உள்ளனர் என்றும் அவர் மிரட்டப்பட்டதற்கு  வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன் தி.மு.க அவருக்கு துணை நிற்கும்” என்று தி.மு.க எம்.பி கணபதி ராஜ்குமார், உறுதி அளித்தார். 

மத்திய அமைச்சரிடம் வருத்தம் தெரிவிக்கும் வீடியோ வெளியிட்டதற்கு தான் அண்ணாமலை வருத்தம் தெரிவித்தாரே தவிர அந்த சம்பவத்திற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர், தொழில் அமைப்பினரின் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராகிய தனக்கு அழைப்பு இல்லை. ஆனால், முதலமைச்சர் பங்கேற்ற மாணவர்களுக்கான உதவிகளை வழங்கும் விழாவில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு முதல் வரிசையில் இருக்கை கொடுத்ததாகவும் ஆனால் பிரித்தாள்வதே இவர்களது வேலை என்று கணபதி ராஜ்குமார் விமர்சித்தார்.

செய்தி: பி.ரஹ்மான்


source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-ganapathy-rajkumar-condemns-to-bjp-and-alleged-bjp-threaten-to-hotel-md-and-shamed-covai-people-7066843

ஒன்றிய அமைச்சர்கள் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் - கனிமொழி காட்டம்

 

Kanimozhi DMK MP on CM MK Stalin and Ministers attend TN Governor RN Ravi Tea Party Tamil News

தி.மு.க துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி, ஒரு திருக்குறளைக் குறிப்பிட்டு, “ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்.” என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி, ஒரு திருக்குறளைக் குறிப்பிட்டு, “ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்.” என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 11) நடைபெற்ற ஜி.எஸ்.டி குறைதீர்க் கூட்டத்தில், சிறு,குறு தொழில் முனைவோர் , பஞ்சாலை  உரிமையாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துரையாடினார். இதில் அனைத்து துறைகளைச் சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளையும் கருத்துகளையும்தெரிவித்தனர். இந்நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன்,  கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ  வானதி சீனிவாசனும் பங்கேற்றார்.

அப்போது, பேசிய கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், “பன்னுக்கு ஜி.எஸ்.டி இல்லை, ஆனால், அதுக்குள்ள வைக்குற கிரீம்க்கு 18% ஜி.எஸ்.டி வரி. உங்க எம்.எல்.ஏ எங்க கடையின் ரெகுலர் கஸ்டமர் தினமும் வந்து சாப்பிட்டுவிட்டு சண்டை போடுகிறார்கள், ஸ்வீட்டுக்கு 5% ஜி.எஸ்.டி, காரத்துக்கு 12% ஜி.எஸ்.டி, ஒரே குடும்பத்துல இத்தனை வகையா ஜி.எஸ்.டி போட்டா சண்டை வருது. கஸ்டமர் பன் மட்டும் எடுத்துட்டு வாங்க, சீனி, ஜாம் நாங்க போட்டுக்கிறோம் என்கிறார்கள், கடை நடத்த முடியல மேடம். அதனால், ஜி.எஸ்.டி வரியை ஒரே மாதிரி ஆக்கிவிடுங்கள்” என்று அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன் கொங்கு தமிழில் நகைச்சுவையாகப் பேசி கோரிக்கை விடுத்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, ஜி.எஸ்.டி வரி மற்றும் மத்திய பா.ஜ.க அரசு மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். 

இதைத்தொடர்ந்து, அந்த ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை, தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என்பதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி,  வைரலானது.

வேறுபட்ட ஜி.எஸ்.டி வரி குறித்தும் இந்த வரியை ஒரே மாதிரியாக சீராக்குங்கள் என்று கொங்கு தமிழில் நகைச்சுவையாகப் பேசிய பிரபல ஹோட்டல் உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இதனால், ஹோட்டல் மன்னிப்பு கேட்பதாக வெளியான வீடியோ வைரலானது.

ஜி.எஸ்.டி வரி குறித்து மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நகைச்சுவையாகப் பேசிய ஹோட்டல் உரிமையாளரை மிரட்டி மனிப்பு கேட்க வைக்கப்பட்டதாக, கரூர் எம்.பி ஜோதிமணி முதல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரை பலரும் நிர்மலா சீதாராமனுக்கும் பா.ஜ.க-வுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

தி.மு.க எம்.பி கணபதி ராஜ்குமார், அன்னபூர்னா சீனிவாசன் வருத்தம் தெரிவிக்கும் வீடியோ அவரது அனுமதி பெற்று வெளியிடப்பட்டதா எனவும் அது தனி மனித சட்ட விதி மீறல் எனவும் அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுவதால் அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானப் படுத்தியது போல் உள்ளது எனவும் கூறி கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்தார்.

இந்த பின்னணியில், தி.மு.க துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி, ஒரு திருக்குறளைக் குறிப்பிட்டு, “ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்.” என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “அணியுமாம் தன்னை வியந்து’

- குறள் 978, அதிகாரம் 98

ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்.” பதிவிட்டுள்ளார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-kanimozhi-attack-nirmala-seetharaman-hotel-owner-apology-7067048