திங்கள், 23 செப்டம்பர், 2024

தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் என அறிவிப்பு!

 மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தகவல் சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் எனவும் தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்தது. இதனடிப்படையில் மத்திய அரசு சார்பில் உண்மை சரி பார்க்கும் பிரிவு அல்லது ‘பேக்ட் செக்கிங் யூனிட்’ என்ற அமைப்பை உருவாக்கியது. இதன் மூலம் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக ஒரு செய்தி வெளியானால், அது சரியா, தவறா என்பதை அந்த யூனிட்டின் உறுப்பினர்கள் ஆய்வு செய்து அது தவறு என கருதினால், அச்செய்தியை உடனே நீக்க அந்தக்குழு சமூக ஊடகங்களுக்கு உத்தரவிடும்.

இந்த உத்தரவுக்கு அந்த குறிப்பிட்ட செய்தியை பதிவேற்றிய தனி நபரோ, நிறுவனமோ அந்த உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்ப விதிகளை திருத்திய மத்திய அரசின் முடிவுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசுக்கு எதிரான விமர்சனங்களையும், மக்களின் கருத்து சுதந்திரம், எழுத்துரிமை ஆகியவற்றையும் ஒடுக்கும் நடவடிக்கை என சில Independent Journalist மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இது, அரசின் அப்பட்டமான செய்தித் தணிக்கை எனவும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

இந்நிலையில் இதற்கு தடை விதிக்கக் கோரியும் திருத்தத்தை செல்லாது என அறிவிக்கக் கோரியும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. நீதிபதி கவுதம் படேல், ‘மத்திய அரசு செய்த விதி திருத்தம் செல்லாது’ என தீர்ப்பளித்தார். ஆனால் மற்றொரு நீதிபதியான நீலா கோகலே, ‘செல்லும்’ என தீர்ப்பளித்தார். இதனால் இந்த இழுபறி நிலையை முடிவுக்கு கொண்டுவர தலைமை நீதிபதி மூன்றாவது நீதிபதியை நியமிக்கப்பட்டார்.

அவ்வாறு நியமிக்கப்பட்ட நீதிபதி சந்துர்கர் முன் இந்த வழக்கு நேற்று முன்தினம் (செப். 20) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சீர்வை ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி “தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் பிரிவு 3ல் செய்யப்பட்ட திருத்தம், வழக்கமான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான சம உரிமை மற்றும் பேச்சுரிமையை மீறுகிறது. பொய் மற்றும் தவறாக வழிநடத்தும் பதிவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட பிரிவு என அரசு கூறுவதில் தெளிவு இல்லை” என தீர்ப்பளித்தார்.

அதேபோல அரசு குறித்த போலி செய்தி, தவறான செய்தி என்றால் என்ன என்பதையே திருத்தப்பட்ட விதியில் அரசு விளக்கவில்லை எனக் கூறினார். எனவே, சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதி 3ல் செய்யப்பட்ட திருத்தம் செல்லாது என நீதிபதி சந்துர்கர் தெரிவித்தார். மூன்று நீதிபதிகளில் இரண்டு பேர் செல்லாது என தீர்ப்பளித்துள்ளதால், அரசின் விதி திருத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தகவல் சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் எனவும் தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.


source https://news7tamil.live/unaffected-by-mumbaihighcourt-verdict-tamil-nadu-govts-fact-checker-will-continue-to-function.html