திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து 'பரிதாபங்கள்' என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட, கோபி - சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக பா.ஜ.க சார்பில் ஆந்திர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக சர்ச்சை வெடித்தது. இந்த விஷயம் குறித்து, 'பரிதாபங்கள்' என்ற பிரபல யூடியூப் சேனலில் கோபி - சுதாகர் ஜோடி, 'லட்டு பாவங்கள்' என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவை அவர்கள் நீக்கிவிட்டனர். மேலும் “கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால், அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம். இதுபோன்று வரும் காலங்களில் நடைபெறாது எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறி, மன்னிப்பு கோரியிருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க.,வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, ஆந்திரா காவல் துறை இயக்குநர் துவாரகா திருமலா ராவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.
அதில், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் வெறுப்பை பரப்பும் வகையிலும் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் வீடியோ அமைந்திருந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ நீக்கப்பட்டிருந்தாலும், இந்துக்களின் உணர்வுகள் அவமதிக்கப் பட்டிருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மத அடிப்படையில் இரு தரப்புக்கு இடையே மோதலை தூண்டி விட முயன்றதாக வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் கோரப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டி, ”பா.ஜ.க மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா ஒப்புதலுடன் லட்டு பாவங்கள் என்ற தலைப்பிலான அவதூறான வீடியோவிற்கு பரிதபங்கள் யூடியூப் சேனலுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி, ஆந்திரப் பிரதேச டி.ஜி.பி.,யிடம் முறையான புகார் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளேன்.
அவர்கள் வீடியோவை அகற்றியிருந்தாலும், வீடியோ இந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பது மட்டுமல்லாமல், சமூகங்களுக்கு இடையே பகையை பரப்பவும், சாத்தியமான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைத் தூண்டவும் முயற்சிக்கிறது.
கூடுதலாக, இது முதல்வர் சந்திர பாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட பொறுப்பான நபர்களை இழிவுபடுத்துகிறது. இந்த முக்கியமான பிரச்சினையில் ஆந்திர காவல்துறை விரைவான மற்றும் நேர்மறையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
இத்தகைய வெறுப்பு மற்றும் அவதூறு நடைமுறைகள் கண்டிக்கப்பட வேண்டும் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தையும் மரியாதையையும் நிலைநிறுத்துவதற்கு உறுதியான தீர்வு காணப்பட வேண்டும்,” என்றும் பதிவிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-bjp-complaint-against-paridhabangal-gopi-sudhakar-for-laddu-paavangal-youtube-video-7096746