பிரதமர் மோடியின் 100 நாள் ஆட்சியில் 38ரயில் விபத்துகள் மற்றும் 26 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
18வது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். இதன் ஒருபகுதியாக பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்று இன்றுடன் 100 நாள்கள் நிறைவு பெறுகிறது.
இதனை முன்வைத்து கடந்த 100 நாளில் நாட்டில் நடந்த பல்வேறு சம்பவங்களைக் குறிப்பிட்டு பாஜக அரசை விமர்சனம் செய்து காங்கிரஸ் கட்சி போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த 100 நாள்களில் 38 ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேபோல பாஜக ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவந்ததாக தேர்தல் பிரசாரங்களை பாஜக முன்வைத்தது. இந்த நிலையில் கடந்த 100நாள்களில் மட்டும் காஷ்மீரில் 26 முறை பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும் இதில் 21 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாகவும் மேலும் பொதுமக்களில் 15 பேர் இறந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 100 நாள்களில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக 104 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுளளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதேபோல கடந்த நூறு நாட்களில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது, நாடாளுமன்ற வளாகத்தில் தண்ணீர் மழை நீர் கொட்டியது, சுதர்ஷனா சேது சாலை சேதமடைந்தது என 56 அரசு கட்டமைப்புகளை சேதமடைந்ததாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
source https://news7tamil.live/38-train-accidents-26-terrorattacks-in-pm-modis-100days-rule-congress-alleges.html