21 09 2024
மணிப்பூர் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எரிந்து வருகிறது. ஆனால், பிரதமர் மோடி என்ன செய்தார்? என அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், எம்பியுமான ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி நடந்த வன்முறை சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டனர்,12 பேர் காயமடைந்தனர். இதனால் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆளூநர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் மாணவர்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 60 பேர் காயமடைந்தனர்.இதனிடையே வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு இணைய சேவைகளும் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில், மணிப்பூர் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எரிந்து வருகிறது. ஆனால், பிரதமர் மோடி என்ன செய்தார்? என அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது, “மணிப்பூர் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எரிந்து வருகிறது. ஆனால், பிரதமர் மோடி என்ன செய்தார்? இந்த சூழலில், உக்ரைன் உடனான போரை நிறுத்துமாறு, ரஷ்ய அதிபர் புதினிடம் தேசிய பாதுகாப்பு அமைப்பை அனுப்பியுள்ளார். வீட்டில் நெருப்பு எரிகிறது, அதை தடுத்து நிறுத்துங்கள். வீட்டில் எரியும் நெருப்பு பற்றி கவலையில்லை. ஆனால், உக்ரைனில் போர் நடக்கக் கூடாது.’’
இவ்வாறு அகில இந்திய மஜ்லிஸ் கட்சிச் தலைவர் ஒவைசி தெரிவித்தார்.
source https://news7tamil.live/manipur-has-been-burning-for-a-year-what-did-pm-modi-do-owaisi-question.html