தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் 24 வயது இளைஞரும் உயிரிழந்தார். இதையடுத்து மலப்புரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை உடனடியாக மேற்கொண்டது. தொடர்ந்து கேரளாவின் அண்டை மாநிலங்களிலும், நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு சோதனை சாவடி மையத்தை அந்தந்த மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன.
இதனிடையே, தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லையில் உள்ள புளியரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு சோதனை சாவடி மையமானது கடந்த சில நாட்களாக செயல்படாமல் இருந்தது. இது தொடர்பாக நியூஸ்7 தமிழ் செய்தி சேனலில் நேற்று (செப். 16) செய்திகள் வெளியிடப்பட்டன. அதன் எதிரொலியாக புளியரைப் பகுதியில் செயல்படாமல் இருந்த, நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு சோதனை சாவடி மையம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு எல்லைக்குள் ‘நிபா வைரஸ்’ நோய் தொற்று அறிகுறிகளுடன் (காய்ச்சல்/வலிப்பு/தலைவலி) சந்தேகத்திற்குரிய நோயாளிகளை கண்டறிந்தால் உடனடியாகப் புகாரளிக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்துடன் இணைந்து சுகாதார தகவல் தளத்தின் மூலம் கடுமையான அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் (AES) நோயாளிகளை சரியான கண்டறிய வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/immediate-reporting-of-patients-with-symptoms-of-nipah-infection-within-district-limits-public-health-department-instruction.html