செவ்வாய், 24 செப்டம்பர், 2024

ஒரே ஆண்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களில் 97% வழக்குகள் 13 மாநிலங்களில் பதிவு! முதலிடத்தில் #UttarPradesh!

 

97% of crimes against Scheduled Castes in one year! #UttarPradesh on top!

கடந்த 2022ஆம் ஆண்டில் பட்டியலின சமூக மக்களுக்கு எதிரான குற்றங்களில் 97.7 சதவீதம் 13 மாநிலங்களில் பதிவாகியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகள் தொடர்பாக மத்திய அரசு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டில் பட்டியலின சமூகத்தினருக்கு (எஸ்.சி.) எதிரான வன்கொடுமை குற்றங்களுக்காக 51,656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 12,287 வழக்குகள் (23.78 சதவீதம்) பதிவாகியுள்ளன.

ராஜஸ்தானில் 8,651, மத்திய பிரதேசத்தில் 7,732, பீகாரில் 6,799, ஒடிஸாவில் 3,576, மகாராஷ்டிரத்தில் 2,706 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த வழக்குகளில் இந்த 6 மாநிலங்களில் மட்டுமே கிட்டத்தட்ட 81 சதவீதம் பங்கு வகிக்கின்றன. 13 மாநிலங்களில் மட்டும் 97.7 சதவீத வழக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பட்டியலின சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் தண்டனை விகிதம் குறைந்துள்ளது. கடந்த 2020ல் 39.2 சதவீதமாக இருந்த தண்டனை விகிதம் 2022-ல் 32.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குகளை விரைவாக நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 14 மாநிலங்களில் உள்ள 498 மாவட்டங்களில், 194 மாவட்டங்கள் மட்டுமே சிறப்பு நீதிமன்றங்களை நிறுவியுள்ளன. அதேபோல 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே வன்கொடுமை நடைபெறும் பகுதிகளை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுத்து வருகின்றன.

உதாரணமாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் வன்கொடுமைகள் நடக்கும் பகுதிகள் என எதுவும் கண்டறியப்படவில்லை. ஆந்திரம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மேகாலயம், மிஸோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சண்டீகர், தில்லி, ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.சி., எஸ்.டி. பாதுகாப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான, வன்கொடுமை குற்றங்கள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதற்கு சிறப்பு காவல் நிலையங்கள் உள்ளன.

23 09 2024



source https://news7tamil.live/97-of-crimes-against-scheduled-castes-in-one-year-uttarpradesh-on-top.html