செவ்வாய், 17 செப்டம்பர், 2024

கேரளாவை மிரட்டும் #NipahVirus… புதிய கட்டுப்பாடுகள் அமல்!

 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்த நிலையில் பல்வேறு தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் 2018 இல் தொடங்கி கடந்த 2023ம் ஆண்டு வரையிலான இடைபட்ட காலங்களில் நிபா வைரஸ் வேகமாக பரவியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. அந்த வகையில், பெங்களூரில் இருந்து கேரளா திரும்பிய நபருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 9ம் தேதி சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில், நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் நேற்று உயிரிழந்தார்.

இதனையடுத்து, நிபா வைரஸ் பாதித்த திருவல்லி கிராம பஞ்சாயத்து மற்றும் மம்பத் கிராம பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கு கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனுடன், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொழில் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், மருந்தகங்களுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அங்கு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பறவை அல்லது விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறிகளை நன்கு சுத்தப்படுத்தியபின் சமைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 09 2024



source https://news7tamil.live/nipahvirus-threatening-kerala-new-restrictions.html