ஜம்மு & காஷ்மீர் #AssemblyElections | 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! 25 09 2024
ஜம்மு காஷ்மீர் 2ஆம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.
90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு மற்றும் காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மூன்று கட்டங்களாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவின் முதல்கட்டம் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகியதாக இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று (செப்.25) ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 26 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.5 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் இதில் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 6 மாவட்டங்களுக்கு நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் 3 பள்ளத்தாக்கிலும் மீதி ஜம்மு பிராந்தியத்திலும் நடைபெறுகிறது.
அது மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களில் ஆயிரத்து 56 வாக்குச்சாவடிகள் மற்றும் கிராமப்புறங்களில் 2 ஆயிரத்து 446 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 26 பிங்க் வாக்குச்சாவடிகள், 26 மாற்றுத்திறனாளிகள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள், 26 இளைஞர்கள் வாக்குச்சாவடிகள், 31 எல்லை வாக்குச்சாவடிகள், 26 பசுமை வாக்குச்சாவடிகள் மற்றும் 22 சிறப்பு வாக்குச்சாவடிகள் என மொத்தம் 157 வாக்குச்சாவடிகள் சிறப்பு வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்டு வாக்கு சதவீதத்தை உயர்த்தும் நோக்கில் அமைக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா கண்டெர்பால் மற்றும் புட்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேநேரம், ஜம்மு காஷ்மீர் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாரிக் ஹமித் கர்ரா மத்திய ஷாட்லெங் தொகுதி மற்றும் ஜம்மு காஷ்மீரின் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா ரஜோரி மாவட்டத்தின் நவுஷேரா தொகுதியில் உள்ளனர்.
மேலும், 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வாக்குச்சாவடி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1 நடைபெற உள்ளது. அதனையடுத்து, அக்டோபர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.