நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பிலிருந்ததாக இதுவரை 175 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 2018 இல் தொடங்கி கடந்த 2023ம் ஆண்டு வரையிலான இடைபட்ட காலங்களில் நிபா வைரஸ் வேகமாக பரவியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. அந்த வகையில், பெங்களூரில் இருந்து கேரளா திரும்பிய நபருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 9ம் தேதி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சூழலில், நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து, நிபா வைரஸ் பாதித்த திருவல்லி கிராம பஞ்சாயத்து மற்றும் மம்பத் கிராம பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கு கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த இளைஞருடன் தொடர்பிலிருந்ததாக இதுவரை 175 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரது விவரங்களும் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அதில் 74 பேர் சுகாதாரப் பணியாளர்கள். இந்த பட்டியலில் உள்ள 10 பேர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ள 13 பேரின் மாதிரிகள் பரிசோத்னைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகளைப் பொறுத்தே, நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சரியாக கண்டறிய முடியும். நிபா எச்சரிக்கையைத் தொடர்ந்து, மலப்புரம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கேரள சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.
source https://news7tamil.live/health-minister-veena-georgekeralanipah-virus.html