செவ்வாய், 17 செப்டம்பர், 2024

வி.சி.க மாநாட்டில் தி.மு.க பங்கேற்கும்: நேரில் சந்தித்த திருமாவிடம் ஸ்டாலின் உறுதி

 Tiruma Manadu

Tirumavalavan

விசிக சார்பில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும், என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை, திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது விசிகவின் மதுஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய திருமாவளவன், ’அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்த்து வந்த முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தோம். முதல்-அமைச்சரின் அமெரிக்கா பயணத்தில் 19 ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது இது வரலாற்று சிறப்பு மிக்க பயணம்.

அக்டோபர் 2-ம் தேதி விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைக்க உள்ளோம். விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ள மதுவிலக்கு மாநாட்டில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வீடியோ குறித்து மு.க.ஸ்டாலினிடம் பேசவில்லை. திமுக - விசி கூட்டணி உறவில் எந்த விரிசலும் இல்லை; நெருடலும் இல்லை. நாங்கள் கூட்டணியில் உறுதியாகவே இருக்கிறோம். தேர்தலுக்கும் இந்த சந்திப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆட்சியில் பங்கு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். மதுவிலக்கு மாநாட்டை தேர்தல் அரசியலோடு இணைத்து, பிணைத்து பார்க்க வேண்டாம்’, என்று கூறினார்.

, முன்னதாக, இந்த மாநாட்டில் அதிமுக கூட பங்கேற்கலாம் என திருமாவளவன் அழைப்பு விடுத்தது அரசியல் களத்தில் சர்ச்சையானது. தொடர்ந்து அண்மையில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவது தொடா்பாக, திருமாவளவன் பேசிய வீடியோ, அவரது X பக்கத்தில் பகிரப்பட்டு பின் நீக்கப்பட்டதும் விவாதப் பொருளானது.

இந்நிலையில் இந்தச் சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று மு.க.ஸ்டாலின், திருமாவளவன் சந்திப்பு நிகழ்ந்தது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-cm-mk-stalin-vck-anti-liquor-conference-7071245