துணை முதல்வராக உதயநிதி நியமனம்; 3 அமைச்சர்கள் நீக்கம்: ஆளுனர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு
29 09 2024
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நடைபெற உள்ளதாவும், அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் கைவசம் இருந்த படங்களை முடித்த அவர், திடீரென அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருந்தார்.
தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியில் இருக்கும் உதயநிதி விரைவில், துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வெளியாகி வந்தது. இதற்கு திமுக மூத்த தலைவர்கள் அமைச்சர்கள் என பலரிடமும் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்தனர். அதேபோல், முடிவு எடுக்கும் அதிகாரம் முதல்வர் கையில் உள்ளது இது குறித்து அதிகாரப்பூர்வ முதல்வர் வெளியிடுவார் என்றும் உதயநிதி கூறியிருந்தார்.
இதனிடையே தற்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய கோரி ஆளுனருக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். நாளை மதியம் 3 மணியளவில், ஆளுனர் ஆர்,என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது தாத்தாவும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் தொகுதியான சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆன உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், தற்போது அமைச்சரவையின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில், தி.மு.க தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் கடந்த ஆண்டு, பண மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 15 மாதங்களாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று முன்தினம் (செப்டம்பர் 26) ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறார். அதேபோல் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டள்ளதாக ஆளுனர் மாளிகை அறிவித்துள்ளது.
source