ஜம்மு-காஷ்மீரில் தொடங்கியது முதல்கட்ட வாக்குப்பதிவு! 18 09 2024
யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப். 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1-ம் தேதியும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அக். 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின் நடக்கும் முதல் தேர்தலாகும். இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. காங்கிரஸும், தேசிய மாநாடு கட்சியும் கூட்டணியாக போட்டியிடுகின்றன. நேற்று முன்தினம் (செப். 16) மாலை 5 மணியுடன், முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்தன.
அனந்த்நாக், சோபியான், தோடா, ராம்பன் உட்பட 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. இத்தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.66 லட்சம் இளைஞர்கள் உட்பட சுமார் 23.27 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முதல்கட்ட தேர்தலில், புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் 35,500 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 16 தொகுதிகளில் வாக்களிக்கின்றனர். இவர்களுக்கு ஜம்முவில் 19, உதம்பூரில் 1, டெல்லியில் 4 என மொத்தம் 24 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துணை ராணுவப் படையினர், ஜம்மு-காஷ்மீர் ஆயுதப் படையினர், காவல்துறையினர் ஆகியோர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.