30 /09/2024
சென்னையின் 2-வது விமான நிலையமாக, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்து தமிழக அரசும் மத்திய அரசும் பணிகளை தொடங்கி உள்ளது.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் பரந்தூரில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது. பரந்தூர் விமான நிலைய திட்டத்தால், குடியிருப்புகள், விளைநிலங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதால், ஏகனாபுரம் உள்பட 13 கிராம மக்கள் பரந்தூர் விமான விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஏகனாபுரம் மக்கள் தொடர்ந்து 797 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தாலும், மறுபுறம் தமிழக அரசு விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. விமான நிலையம் அமைக்க நிலம் எடுக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.
பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில்துறை செப்டம்பர் 26-ம் தேதி அனுமதியளித்தது.
இதையடுத்து, சுற்றுச்சூழல் அனுமதி கோரி, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்தும், தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இம்மாத தொடக்கத்தில் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் மேலாண்மை திட்டத்தை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வகுத்து அனுமதியளித்தது.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள மொத்தம் 445 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் ஆட்சேபனை இருந்தால் ஒரு மாதத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/parandur-airport-project-ordinance-issued-for-land-acquisition-7147979