திங்கள், 4 நவம்பர், 2024

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 32,000 இடங்கள்: ஏ.ஐ.சி.டி.இ அனுமதி

 

engineering

தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பி.இ, பி.டெக் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை வழங்குகின்றன. 2.70 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இந்நிலையில், இந்தாண்டு தமிழக பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 32,000 இடங்களுக்கு 
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அனுமதி அளித்துள்ளது. 

இதன் மூலம் 2023-24ம் கல்வியாண்டில் 2,75,830ஆக இருந்த இடங்களின் எண்ணிக்கை, இப்போது 2024-25 கல்வியாண்டில் 3,08,686 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பொறியல் படிப்பு மீதான ஆர்வம் அவ்வப்போது மாறுபட்டு வருகிறது. படிப்புக்கு ஏற்ப மாறுபடுகிறது என்று கூறலாம். 

நடப்பாண்டில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 54,000 இடங்கள் நிரம்பவில்லை. சிலகுறிப்பிட்ட பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே,  இடங்கள் முழுமையாக நிரப்பி உள்ளன. பல பொறியியல் கல்லூரிகளை நடத்துவதே சிரமமாக உள்ளது என்று நிர்வாகத் தரப்பினர் கூறுகின்றனர். எனினும் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. 

 இதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் பொறியல் கல்லூரி இடங்கள் 3,08,686 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக ஆந்திராவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 23,500 இடங்களை தொழில்நுட்ப கல்வி குழுமம் அனுமதித்துள்ளது. இதையடுத்து ஆந்திராவில் உள்ள கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 1,83,532 இடங்களாக உயர்ந்துள்ளது. 

source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-adds-32000-more-engineering-seats-this-year-7383049