29/11/24
அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு 50 கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக மேலூரில் இன்று (நவம்பர் 29) கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பாதுகாக்கப்பட்ட பல்லுயிர்தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பெருமைகளையும், வரலாற்று சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கிய 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமம் சார்பில் ஏலம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது
இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் இயற்கை சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மாநில அரசு இதற்கு எக்காரணம் கொண்டு அனுமதி வழங்க கூடாது என கிராம மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த 23 ஆம் தேதி அரிட்டாபட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு டங்ஸ்டன் திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்காது என உறுதியுடன் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் கண்டன கூட்டங்கள் நடத்தி தீர்மானங்களும் நிறைவேற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் உள்ள கோவில் முன்பு அரிட்டாபட்டி, மாங்குளம், வல்லாளப்பட்டி, புலிப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். கிராம அம்பலகாரர்கள் தலைமை தாங்கினர். மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான் மற்றும் விவசாய சங்கத்தினர் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பேசினர்.
அப்போது மத்திய அரசு இந்த பகுதியில் டங்ஸ்டன் திட்டத்திற்கு அனுமதித்தால் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வரக் கூடாது. மாநில அரசு இதனை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு;
டங்ஸ்டன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது 3 என முதலமைச்சர் உடனே உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
சட்டமன்றத்தை கூட்டி டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதோடு அரசாணையும் பிறப்பிக்க வேண்டும்.
தமிழக எம்.பி.க்கள் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
தொடர்ந்து டங்ஸ்டன். திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (29 ஆம் தேதி) மேலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் முழு கடையடைப்பு மற்றும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு வணிகர்கள், விவசாயிகள், வக்கீல்கள் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/marurai-villages-announce-protest-against-tungsten-mining-at-arittapatti-7656131