source https://tamil.indianexpress.com/india/canadian-media-report-pm-modi-aware-of-nijjar-muder-plot-india-reply-7596703
இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று கூறிய கனேடிய ஊடக அறிக்கையை இந்தியா மறுத்துள்ளது.
கனேடிய செய்தித்தாள் தி குளோப் அண்ட் மெயிலில் வெளியான செய்திக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலளித்தார். இதுபோன்ற "கேலிக்குரிய அறிக்கைகளை" கடும் கண்டனத்துடன் நிராகரிக்க வேண்டும் என்றார்.
அவர் கூறுகையில், வெளியுறவு அமைச்சகம் பொதுவாக ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் கனேடிய அரசாங்க அதிகாரி கூறப்படுவதாக உள்ள இந்த செய்தியை தகுதியான பதிலடியுடன் நிராகரிக்க வேண்டும். இதுபோன்ற கருத்துகள்
ஏற்கனவே சிதைந்துள்ள இருநாட்டு உறவுகளை மேலும் சேதப்படுத்தும் ”என்று கூறினார்.
ஊடக செய்தி என்ன?
குளோப் அண்ட் மெயில் ஊடகத்தில் வெளியான செய்தியில், பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்டது மற்றும் பிற வன்முறை சதித்திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று கூறியுள்ளது. இதை கனேடிய பாதுகாப்பு அமைப்புகள் நம்புவதாக அந்நாட்டு உளவுத்துறையில் பணியாற்றிய மூத்த தேசிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தாக கூறியுள்ளது.
மேலும் கனேடிய மற்றும் அமெரிக்க உளவுத்துறை அமைப்பு இந்த சதி திட்ட நடவடிக்கையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் இருப்பதாக கூறியுள்ளது.