செவ்வாய், 26 நவம்பர், 2024

டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை: மத்திய அமைச்சகம் பகீர் தகவல்

 

Delta Districts cultivate kuruvai crops in 3.87 lakhs acre this year

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. 

மக்களவையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில், 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில், ஒன்றிய அரசுக்கு அந்த முன்மொழிவு அனுப்பப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்தவொரு பரிந்துரையும் பெறவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. 

மேலும், கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை என்றும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 3 திட்டங்களின் கால அளவை மட்டும் நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடலூர், விழுப்புரம், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. 

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை மத்திய அரசால் அறிவிக்க முடியும். 

எனினும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த முன்மொழிவும் வரவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/delta-districts-are-not-protected-agricultural-zone-says-union-ministry-7608940