நாமக்கல் மாவட்டத்தில், அரசுப் பள்ளி ஒன்றின் பெயர் பலகையில் அரிசன் காலனி என்று இருந்ததை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அரிசன் காலனி என்று இருந்ததை கருப்பு மை பூசி அழித்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக்கு புதிய பெயர் வைத்து அரசாணையை வெளியிட்டார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசுப் பள்ளியின் பெயரை மாற்றியது ஏன் என்பது குறித்து பின்னணியை விவரமாகப் பார்ப்போம்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில், பட்டியல் இனத்தவர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் பெயர் பலகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரிசன் காலனி என்று இருந்தது. அரிசன் காலனி என்று குறிப்பிடப்பட்டு இருப்பதை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அரிசனம் என்ற பெயர் பட்டியல் இனத்தவரைக் குறிக்கும் பெயராக உள்ளது. ஹரிஜன் என்பது காந்தி அன்றைக்கு தீண்டப்படாத மக்களைக் குறிப்பிடுவதற்காக பயன்படுத்த்னார். அதாவது கடவுளின் பிள்ளைகள் என்ற பொருளில் பயன்படுத்தினார். இந்த பெயரை பட்டியல் இனத்தவர் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை.
இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, இந்த குறிப்பிட்ட பள்ளிக்கு நேரடியாக ஆய்வுக்கு சென்றார். அப்போது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரிசன் காலனி என்று பெயர் பலகையில் இருந்தது, அதில் ‘அரிசன் காலனி’ என்ற பெயரை கருப்பு மை பூசி அழித்தார்.
மேலும், இந்த பள்ளியின் பெயரை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு என பெயரை மாற்றி, பள்ளியின் பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரசாணையை அமைச்சர் வழங்கினார். அரிசன் காலனி என்ற பெயரை மாற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை அப்பகுதி மக்கள் பாராட்டினர். மேலும், பள்ளியின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வந்தவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சால்வை அணிவித்து பாராட்டினார்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு எனப் பெயர் மாற்றம் செய்தது குறித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி’ எனும் பெயரினை ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில் ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வெளியிட்டோம்.
தொடர்ந்து இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று ‘அரிசன் காலனி’ எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினோம். இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் கணேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.
ஊர் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் ஜி. அன்பழகனிடம் ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அலைப்பேசி வாயிலாக தெரிவித்தோம். மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ - மு.க” என்று அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-anbil-mahesh-poyyamozhi-action-harijan-colony-name-removed-in-govt-school-name-board-7608829