20 11 24
அமெரிக்காவின் நியூயார்கில் உள்ள வழக்கறிஞர்கள் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதன்படி, “இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க, முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளிடம் பொய் சொல்லி பில்லியன் டாலர்களை திரட்டி நீதிக்கு தடையாக இருந்ததனர்” என அமெரிக்க அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானியை தவிர்த்து மற்ற சிலர் பெயர்களும் இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, சாகர்.ஆர்.அதானி, வினீத் எஸ். ஜெயின், ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால், சிரில் கபேன்ஸ், சவுரப் அகர்வால் மற்றும் தீபக் மல்ஹோத்ரா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்? அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின்
அதானி குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனராக கௌதம் அதானி பதவி வகிக்கிறார். மேலும், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் கௌதம் அதானி விளங்குகிறார். கௌதம் அதானியின் மருமகன் சாகர் அதானி, அதானி கிரீன் எனர்ஜியின் செயல் இயக்குநராக உள்ளார்.
அதானி க்ரீன் எனர்ஜியின் நிர்வாக இயக்குநரான வினீத் ஜெயின், 15 ஆண்டுகளுக்கும் மேலாக அதானி குழுமத்துடன் தொடர்புடையவர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள்:
“கௌதம் எஸ் அதானி மற்றும் ஏழு வணிக நிர்வாகிகள் இந்திய அரசாங்கத்திற்கு லஞ்சம் கொடுத்து தங்கள் வணிகங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இலாபகரமான ஒப்பந்தங்களுக்கு நிதியளித்ததாகக் கூறப்படுகிறது. அதானி மற்றும் பிற பிரதிவாதிகள் லஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய தவறான அறிக்கைகளின் அடிப்படையில் முதலீட்டாளர்களை ஏமாற்றினர், அதே நேரத்தில் மற்ற பிரதிவாதிகள் அரசாங்கத்தின் விசாரணையைத் தடுக்கும் வகையில் லஞ்ச சதியை மறைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது," என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எஃப்.பி.ஐ பொறுப்பு உதவி இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
"பல சந்தர்ப்பங்களில், கௌதம் எஸ் அதானி லஞ்சத்தை முன்னெடுப்பதற்காக இந்திய அரசாங்க அதிகாரி ஒருவரை நேரில் சந்தித்தார். மேலும் பிரதிவாதிகள் ஒருவரையொருவர் நேரில் சந்தித்து அதை செயல்படுத்துவதற்கான அம்சங்களைப் பற்றி விவாதித்தனர்" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் ஜெயின் ஆகியோர் “இந்திய எரிசக்தி நிறுவனத்தின் (அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பற்றிய குறிப்பு) லஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடைமுறைகளை தவறாக சித்தரித்து, அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெறுவதற்காக லஞ்சத்தை மறைக்க சதி செய்தனர். லஞ்சம் மூலம் வாங்கப்பட்ட சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களுக்கு நிதியளிக்கப்பட்டது," என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சர்வதேச நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய கடன் வழங்கும் குழுக்களிடமிருந்து 2 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர் மதிப்பிலான இரண்டு சிண்டிகேட் கடன்கள் தொடர்பாக தவறான அறிக்கைகளின் அடிப்படையில் மூலதனத்தை திரட்டினர். அமெரிக்க அடிப்படையிலான முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களால் 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள இரண்டு 144A பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை அமெரிக்காவில் சந்தைப்படுத்தப்பட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "இந்திய எரிசக்தி நிறுவனம், அவர்களின் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளிலும், சந்தை மற்றும் முதலீட்டாளர்களிடம் லஞ்ச திட்டம் தொடர்பாக தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும் அவர்கள் காரணமாகினர்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையின்படி, சாகர் அதானி தனது செல்போனை அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட லஞ்சம் மற்றும் வாக்குறுதியின் குறிப்பிட்ட விவரங்களைக் கண்காணிக்க பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயின் தனது செல்போனைப் பயன்படுத்தி லஞ்சம் தொடர்பான ஆவணங்களை புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் குப்தா மற்றும் ரூபேஷ் அகர்வால்
ரஞ்சித் குப்தா 2019 மற்றும் 2022 க்கு இடையில் அஸூர் பவர் குளோபல் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். யுனைடெட் ஸ்டேட்ஸ் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் தாக்கல் செய்த இரண்டாவது, சிவில் புகாரில் அஸூர் பெயரிடப்பட்டுள்ளது, "அஸூரிடமிருந்து லஞ்சம் வசூலிப்பதில் பிரதிவாதிகள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை செய்திக்குறிப்பு, அஸூரை "நியூயார்க் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்த பத்திரங்களைக் கொண்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம்" என்று குறிப்பிடுகிறது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள்:
அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகத்தின்படி, "பவர்பாயிண்ட் மற்றும் எக்செல் மூலம் பல பகுப்பாய்வுகளைத் தயாரித்து மற்ற பிரதிவாதிகளுக்கு ரூபேஷ் அகர்வால் விநியோகித்தார்" எனக் கூறப்பட்டுள்ளது.
அவர், மற்ற பிரதிவாதிகளான கபேன்ஸ், அகர்வால் மற்றும் மல்ஹோத்ரா ஆகியோருடன் சேர்ந்து பல்வேறு அமைப்புகளின் விசாரணைகளை தடுக்க சதி செய்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரில் கபேன்ஸ், சவுரப் அகர்வால் மற்றும் தீபக் மல்ஹோத்ரா
ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சின் குடிமகன் கபேன்ஸ், இந்திய குடிமக்களாகிய அகர்வால் மற்றும் மல்ஹோத்ரா ஆகியோர் கனடிய ஓய்வூதிய நிதியான CDPQ இல் பணியாற்றினர். இது அஸூர் நிறுவனத்தில் பெரும் பங்குகளை வைத்திருந்தது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள்:
கபேன்ஸ், அகர்வால் மற்றும் மல்ஹோத்ரா ஆகியோர் மீது "கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட லஞ்சத் திட்டம் தொடர்பாக வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீற சதி செய்ததாக" குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
செய்தி - ஹிதேஷ் வியாஸ்
source https://tamil.indianexpress.com/explained/adani-indictment-bribery-accused-names-7600324