இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாக இருக்கும் அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவில், லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால், கென்யா நாட்டின் முக்கிய விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட கொள்முதல் செயல்முறையை ரத்து செய்வதாக கென்ய அதிபர் வில்லியம் ரூடோ அறிவித்துள்ளார்.
கென்யாவில், நைரோபியின் ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தில், அதானி குழுமம் இரண்டாவது ஓடுபாதையைச் சேர்த்து, பயணிகள் முனையத்தை மேம்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுடிருந்தது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக கென்ய அதிபர் அதிபர் வில்லியம் ரூடோ தெரிவித்துள்ளார்.
ருடோ தனது ஸ்டேட் ஆஃப் நேஷன் உரையில், "போக்குவரத்து அமைச்சகம், எரிசக்தி மற்றும் பெட்ரோலிய அமைச்சகம் ஆகியவற்றில் உள்ள ஏஜென்சிகளுக்கு, தற்போது நடைபெற்று வரும் கொள்முதலை உடனடியாக ரத்து செய்யுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார். அதானி குழும நிறுவனம் ஒரு தனி திட்டத்திற்காக மின்சாரம் செல்லும் பாதைகளை அமைப்பதற்காக எரிசக்தி அமைச்சகத்துடன் 30 வருட, 736 மில்லியன் பொது-தனியார் கூட்டு ஒப்பந்தத்தில் கடந்த மாதம் கையெழுத்திட்டது.
தற்போது கென்யா எரிசக்தி அமைச்சர் ஓபியோ வாண்டாய், டிரான்ஸ்மிஷன் லைன்ஸ் ஒப்பந்தத்தை வழங்குவதில் லஞ்சம் அல்லது ஊழல் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். ஆனால் ருடோவின் அறிவிப்பு, அவரது உரையின் போது நாடாளுமன்றத்தில் இருந்த சட்டம் இயற்றுபவர்களிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றது. கென்யா அதிபரின் இந்த அறிவிப்புக்கு அதானி குழுமத்திடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
உலகப் பணக்காரர்களில் ஒருவரான அதானி குழுவின் நிறுவனர் கவுதம் அதானி மற்றும் அவருடன் ஏழு பேர் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்ததோடு, இந்த குற்றச்சாட்டுகளை சட்டத்தின் வழியில் அனுக உள்ளதாக அறிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/india/kenya-drops-airport-deal-with-adani-group-after-us-indictments-7598977