மணிப்பூர் விரைந்த 20 ஆயிரம் ராணுவ வீரர்கள்!
மணிப்பூரில் நடந்துவரும் இனக்கலவரத்தால் தற்போது வரை 258 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கலவரத்தை கட்டுப்படுத்த கூடுதலாக 20 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது.
மணிப்பூரில் குக்கி மற்றும் மைதேயி இன மக்களுக்கு இடையே கடந்தாண்டு முதல் மோதல் நிலவி வருகிறது. இந்த இரு சமூகங்களுக்கிடையேயான மோதலால் மணிப்பூரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு, பல மக்கள் குடும்பத்தையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் நடந்துவரும் இனக்கலவரத்தில் தற்போது வரை 258 பேர் உயிரிழந்துள்ளதாக மணிப்பூர் மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார். மேலும் வன்முறையை கட்டுப்படுத்த, மணிப்பூரில் ஏற்கனவே உள்ள 198 ராணுவ நிறுவனங்களுடன், கூடுதலாக 90 பட்டாலியன் மத்திய துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் அதிக பதற்றமான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் அனைத்து பகுதிகளிலும் வீரர்கள் சென்றடைந்து விடுவார்கள். ஆயுத கிடங்கிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபட்டதற்காக தற்போது வரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் வன்முறைகள் அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று 20,000 துணை ராணுவ வீரர்கள் மணிப்பூர் விரைந்துள்ளனர். இது குறித்து குல்தீப் கூறியதாவது:
நாங்கள் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம்.
கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களின் முக்கிய பகுதிகள் மற்றும் இம்பால் நகரத்தின் பாதுாப்பை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். இதில் ராணுவம், போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள் பங்கேற்றனர். தற்போதைய நிலைமை குறித்து அவர்களுடன் ஆலோசித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.