29/11/24
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பாதுகாக்கப்பட்ட பல்லுயிர்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பெருமைகளையும், வரலாற்று சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கிய 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமம் சார்பில் ஏலம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது
இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் இயற்கை சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மாநில அரசு இதற்கு எக்காரணம் கொண்டு அனுமதி வழங்க கூடாது என கிராம மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் கண்டன கூட்டங்கள் நடத்தி தீர்மானங்களும் நிறைவேற்றி வருகிறார்கள். இன்று வெள்ளிக்கிழமை மேலூர் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இதனிடையே, 'சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வந்தால் ஏற்க மாட்டோம்' என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதேபோல், கடந்த 23 ஆம் தேதி அரிட்டாபட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு டங்ஸ்டன் திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்காது என உறுதியுடன் கூறினார்.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது. இதுபோன்ற சுரங்கத் தொழிலை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு (28-11-2024) அன்று கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் எழுதியுள்ள அக்கடிதத்தில், மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலைமையை குறிப்பிட்டு, பிரதமர் மோடி உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தினை ரத்து செய்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற முக்கியமான கனிமங்களின் சுரங்க உரிமங்களை மத்திய அரசு ஏலம் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தமிழ்நாடு அரசின் கவலைகளை, நீர்வளத் துறை அமைச்சர் 3-10-2023ஆம் நாளிட்ட கடிதத்தின் மூலமாக ஏற்கெனவே மத்திய அரசுக்குத் தெரிவித்திருந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர், தனது 2-11-2023 நாளிட்ட கடிதத்தில், நாட்டின் நலன்களுக்காக, சுரங்க அமைச்சகத்தின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்திருந்தார்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-arittapatti-tungsten-mine-tn-cm-mk-stalin-write-letter-to-pm-modi-tamil-news-7657509