லெபனானுடனான போர் ஒப்பந்தத்திற்கு இடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏறக்குறைய 14 மாதங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது லெபனானுக்கு நிம்மதியை அளித்தது. இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பரம் இரு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காசா போருக்கு இணையாக நடைபெற்று வரும் இப்போரை முடிவுக்கு கொண்டுவர இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இரண்டு மாத போர்நிறுத்த காலத்தில், ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய தனது போராளிகளை தெற்கு லெபனானில் இருந்து திரும்பப் பெற வேண்டும். அதே நேரத்தில் இஸ்ரேலிய படைகள் தங்கள் பக்கம் திரும்ப வேண்டும். எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில், லெபனான் துருப்புக்கள் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் ரோந்து செல்வர்.
இதனிடையே புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட போர் ஒப்பந்தத்திற்கு பிறகு வியாழன்று, தெற்கு லெபனானில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் இருவர் காயமடைந்ததாக லெபனான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு, தெற்கு மண்டலத்தில் வாகனங்களில் வந்த “சந்தேக நபர்கள்” மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் விளக்கம் அளித்தது. தொடர்ந்து வான்வழித் தாக்குதலையும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியது.
ராக்கெட் சேமிப்பு கிடங்கு ஒன்றில் ஹிஸ்புல்லா நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியதால் தெற்கு லெபனான் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இரண்டே நாட்களில் பலமுறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக லெபனான் ராணுவம் குற்றம் சாட்டியது. இந்நிலையில் வியாழன் அன்று காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீனிய அகதிகள் அமைப்பின் (UNRWA) தலைவர் Philippe Lazzarini வியாழனன்று காசாவில் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறினார். கடந்த ஏழு வாரங்களாக காசாவின் வடக்கு விளிம்பில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் 130,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அக்டோபர் 7, 2023 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் 44,330 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 104,933 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் 1,139 பேர் கொல்லப்பட்டனர்.
source https://news7tamil.live/42-killed-in-israeli-attack-on-gaza-also-a-violation-of-ceasefire-agreement-with-lebanon.html
29/11/24