வியாழன், 28 நவம்பர், 2024

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாதது ஏன்? – கனிமொழி என்.வி.என்.சோமு எம்பி விளக்கம்!

 28 11 24

விஸ்வகர்மா திட்டத்தை அதன் வடிவிலேயே தமிழ்நாடு அரசு செயல்படுத்தாதது ஏன் என கனிமொழி என்.வி.என்.சோமு எம்பி விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை அதன் தற்போதைய வடிவத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் எழுதினார். மத்திய அரசின் திட்டத்தை வேண்டுமென்றே தமிழ்நாடு அரசு எதிர்ப்பதாக பல தரப்பிலிருந்தும் பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக கனிமொழி என்.வி.என்.சோமு எம்பி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“விஸ்வகர்மா திட்டத்தை, வெறுமனே மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் என்ற காழ்ப்புணர்ச்சியில், தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என்று கூறுவோர் கவனத்திற்காக, இந்த திட்டத்தில் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ள மாற்றங்கள் பற்றிய சில குறிப்புகளை இங்கே பகிர விரும்புகிறேன்.

1). கட்டாயமாக பாரம்பரிய குடும்பத்தொழிலாக குறிப்பிட்ட தொழிலை கொண்டிருக்கவேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டு, தகுதி படைத்தோர் தங்களுக்கு விருப்பமான தொழில்களை மேற்கொள்ள வழிவகை செய்திட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் ரீதியான சமூக அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கமுடியும்.

2). குறைந்தபட்ச வயது வரம்பு 35 வயது அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கவேண்டும். இதன்மூலம் தன் சுய விருப்பத்தோடு குடும்பத்தொழிலை மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்று பரிந்துரைத்து உள்ளனர். இந்த நிபந்தனை மூலம் படிக்கும் வயதிலேயே தொழில் நோக்கி நகர்த்திவிட்டு கல்வி உரிமையை பறிக்க விரும்பும் சதித்திட்டம் நமது தமிழ்நாடு அரசால் தகர்க்கப்படுகிறது.

3). பஞ்சாயத்து தலைவர்கள் மூலமாக ஆவணங்கள் சரிபார்த்தல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பதிலாக, கிராம நிர்வாக அலுவலர்களிடம் இந்த பணிகள் ஒப்படைக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் பஞ்சாயத்து அளவிலான அதிகாரத்தை பயன்படுத்தி ஊழலோ அல்லது சாதிய ரீதியிலான அழுத்தமோ பயனாளிகள் மீது மேற்கொள்ளப்படுவதை தவிர்க்க முடியும். மேலும் மாநில அரசின் அதிகார வரம்புக்குள்ளாக ஆவணப்படுத்தப்படுதல் நடக்கும்போது, தகவல்கள் சரிபார்ப்பதும் எளிமையாக்கப்படும்.

ஜனவரி 4, 2024 அன்றே திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இந்தப் பரிந்துரைகளை சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில், மத்திய அரசிடம் அளித்திருந்தார். ஆனால் 15 மார்ச், 2024 அன்று மத்திய அமைச்சகத்தால் வழங்கப்பட்டிருந்த பதில் அறிக்கையில் இந்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படாமலும், எந்தவிதமான மாற்றங்கள் இல்லாமலும் வெளிவந்துள்ளது.


எனவே சாதிய அடிப்படையில் வேறுபாடு பாராட்டாது, தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு தனி நபரது தேவைகளை பொறுத்தே அவர்களுடைய பொருளாதாரம் சார்ந்த முடிவுகள் எடுப்பதை உறுதி செய்தல் வேண்டும் என்றும், அதுவரை இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாது என்றும், தான் நெஞ்சில் கொண்டுள்ள சுயமரியாதை சித்தாந்தத்தின் வழி பதில் அளித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர்.

தமிழினத்தின் உரிமை காத்து சமூகநீதி இலட்சியத்தை நோக்கி செயல்படும் நமது அரசு, எந்தவகையிலும் அதிகாரத்திற்காக தனது கொள்கைகளில் சமரசம் மேற்கொள்ளாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டது…!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


source https://news7tamil.live/why-hasnt-the-tamil-nadu-government-implemented-the-vishwakarma-project-kanimozhi-n-v-n-somu-mp-explains.html