செவ்வாய், 19 நவம்பர், 2024

பிலிப்பைன்ஸ் நாட்டில் வரலாறு காணாத மழை | ஒரு மாதத்தில் 6 பெரிய சூறாவளி!

 

பிலிப்பைன்ஸ் நாட்டில் வரலாறு காணாத மழை | ஒரு மாதத்தில் 6 பெரிய சூறாவளி! 19 11 24

தெற்காசிய தீவான பிலிப்பின்ஸ் கடந்த ஒரு மாத காலத்தில் 6 புயல்களால் மிகப்பெரியளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.

அங்கு கடந்த 3 வார காலத்தில் 5 புயல்கள் கரையைக் கடந்துள்ளன. கடந்த மாத பிற்பகுதியில், பிலிப்பின்ஸில் ‘ட்ராமி’ புயல் தாக்கியதில், ஒரு மாத காலத்தில் பெய்ய வேண்டிய அளவுக்கு மழைப்பொழிவு, வெறும் 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு நகரங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் வீசிய சூறைக்காற்று, மற்றும் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ளது.

இந்த நிலையில் கடைசியாக, பிலிப்பின்ஸின் கிழக்கே அமைந்துள்ள கேட்டெண்டுவானெஸ் தீவில் ‘மேன்-இ (பெப்பிடோ)’ புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்துள்ளது. அப்போது, மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று தொடர்ந்து வீசியதாகவும், காற்றின் உச்சபட்ச வேகம் மணிக்கு 240 கி.மீ. வரை சென்றதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைப்பொழிவு அதிகளவில் இல்லாமல் போனாலும், காற்றின் வேகம் அசுரத்தனமாக இருந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு விவரஙக்ள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இதன் காரணமாக, கடலில் அலைகள் சுமார் 7 மீட்டர் (23 அடி) உயரத்துக்கு ராட்சஷ அலைகளாக எழும்பியதால் கடற்கரைப் பகுதிகள் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டன. ஏராளமான மரங்கள் முறிந்ததுடன், மின் கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளதால் மாகாணம் முழுவதும் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. பல வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் பாதிக்குப் பாதி பேர், சுமார் 80,000 மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையைக் கடந்துவிட்ட போதிலும், ஞாயிற்றுக்கிழமை வட மேற்கு திசையில் நகர்ந்து, லூஸான் பகுதியை தாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.



source https://news7tamil.live/record-breaking-rain-in-the-philippines-6-major-typhoons-in-one-month.html