புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ. 2.85 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வர் படைப்பகத்தில் படிக்க ஒரு தளம், பணியாற்ற ஒரு தளம், உணவு சாப்பிட ஒரு தளம் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது. ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. படிப்பிற்குத் தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.
கடந்த 27ம் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் திமுக -வை விமர்சித்து பேசிய தவெக தலைவர் விஐய்க்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :

” புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என நினைக்கின்றனர். அவர்கள் இந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு செய்துள்ள சாதனைகளை ஒரு முறை எண்ணிப் பார்க்க வேண்டும். ‘வாழ்க வசவாளர்கள்’என அண்ணா கூறியதை நினைவில் வைத்து செயல்படுகிறோம். திமுக அரசை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்கள் பணியை செய்யவே எங்களுக்கு நேரமில்லை”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
source https://news7tamil.live/cmotamilnadu-mkstalin-dmk-tamilnadu-tvk-tvkvijay.html