அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு பெரிய பிரச்னையாக உள்ள நிலையில், அமெரிக்க தூதரகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெண்டானில் (Fentanyl) என்ற போதைப்பொருள் மூலப்பொருட்களை கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட சில இந்திய நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு விசாக்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சுகர் டேட்டாவின் அறிக்கை
அமெரிக்காவில் 52,000-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த ஃபெண்டானில், வலி நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த ஓபியாய்டு போதைப்பொருள் ஆகும். இந்த ஃபெண்டானில் கடத்தலை தடுக்க டிரம்ப் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, "ஃபெண்டானில் மூலப்பொருட்களைக் கடத்தியதாக அறியப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு விசாக்களை ரத்து செய்து, எதிர்காலத்தில் விசாவுக்கு விண்ணப்பித்தால் அவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்" என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவின் அதிரடி முடிவு
இந்த நடவடிக்கையானது, அமெரிக்க குடியேற்ற மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, விசா ரத்து செய்யப்பட்ட தனிநபர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவுக்குச் செல்லத் தகுதியற்றவர்கள் ஆகலாம். இந்த நடவடிக்கை, போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடும் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
"சட்டவிரோதமாக போதைப்பொருட்களை உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு கடத்தும் தனிநபர்களும், நிறுவனங்களும், அவர்களின் குடும்பத்தினரும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை உட்பட பல விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று அமெரிக்க தூதரகத்தின் சார்ஜ் டி அஃபேர்ஸ் ஜோர்கன் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சவாலை எதிர்கொள்ள இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் அதிரடி அறிக்கை
முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளை "முக்கிய போதைப்பொருள் கடத்தல் அல்லது சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகள்" எனப் பட்டியலிட்டு இருந்தார். இந்த நாடுகள் போதைப் பொருட்களையும் அதன் மூலப்பொருட்களையும் உற்பத்தி செய்து கடத்தி, அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், ஒரு நாடு இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது, அந்நாட்டின் போதைப்பொருள் தடுப்பு முயற்சிகளைப் பிரதிபலிக்காது என்றும், புவியியல், வணிகம் மற்றும் பொருளாதார காரணிகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/international/us-revoked-visas-of-indian-business-executives-over-link-to-fentanyl-trade-embassy-10476899