தமிழகத்தில் 1990-களில் இருந்து தொழில் செய்து வரும் ஹூண்டாய் நிறுவனம், தற்போதைய தவெக அரசின் மீதான நம்பிக்கையின்மையால் தனது ரூ. 38,000 கோடி புதிய முதலீடு தொடர்பாக ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தைச் சரியாக நிர்வகிக்காமல் சீரழித்து வரும் தற்போதைய 'அனுபவமில்லாத' அமைச்சரவையே இதற்கு முதன்மைக் காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
இதற்கு மூலக் காரணம், மாண்புமிகு அம்மா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு துவங்கிய தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்!
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா?
Amateur (அனுபவமில்லாத) அமைச்சரவையின் Immature (முதிர்ச்சியற்ற) அமைச்சராக உள்ள இன்றைய தொழில்துறை அமைச்சர், இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை.
உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack (விரைவாக) செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/eps-slams-tvk-govt-over-hyundai-38000-crore-investment-issue-12153440





